பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதத்தில் கடந்த 1 ம் தேதி தொடங்கி ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளிடையே காரசார விவாதங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களயும் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து நிறைவேற்றி  வருகிறது. அந்த வகையில் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசால் 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம், நாட்டு மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திட்டம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழித்து மக்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையவும் அப்போதைய காங்கிரஸ் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டு, அதற்கு " மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்" எனவும் பெயரிடப்பட்டிருந்தது. 

Advertisment

இந்த திட்டத்திற்கு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என  பெயர் மாற்றும்  மசோதாவை தற்போதைய ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில், திமுக வின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு இந்த பெயர் மாற்ற திட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார். மேலும்,டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரால்  இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்று பேசினார். மேலும்   "இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது" என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார் என்றும், அவ்வாறாக  கிராம மக்களின் வளர்ச்சிக்காகவே இந்த திட்டம் செயல்பட்டு வந்ததாகவும் கூறியிருந்தார். காந்தியின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாகவே இந்த பெயர் மாற்றும் திட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

Advertisment

இந்த திட்டத்திற்கு இது வரையில் ஒன்றிய அரசு 90% நிதியை வழங்கி வந்த நிலையில், இந்த மசோதாவில் கொண்டுவரப்பட உள்ள  திருத்தினால் 60% நிதியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் எனவும் மீதமுள்ள 40% நிதிக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.