சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (01.07.2025) நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் செல்லச் சொல்ல, நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேராசிரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அஜித் குமாரின் உயிரிழப்பிற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2010 ஆம் ஆண்டு என்னுடைய பிஎட் ஸ்டுடென்ட் நிகிதா. அதன் மூலமாகத்தான் அந்த குடும்பத்தில் எனக்கு அறிமுகமானது. அவர்கள் என்னுடைய உறவினர்களும் கூட. கோவிலில் நடக்க முடியாமல் நாடகம் போட்ட சிவகாமி அம்மையார் எனக்கு நைட் 11:45க்கு போன் செய்து இரண்டே நாளில் அரசு வேலை உடனடியாக ஒன்பது லட்சம் கொண்டு வாங்க வேலை வாங்கி தந்து விடுகிறோம் என சொன்னார்.
நான் எம்காம், எம்.எட், எம்.பில் முடித்திருந்தேன். உடனடியாக இரண்டே நாளில் வேலை. நீ ரத்த சொந்தம் என்பதால் கூப்பிடுகிறேன். நீ வந்து அப்பாவை பாரு என்றனர். அவருடைய அப்பா பேரு ஜெயப்பெருமாள். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஒன்பது லட்சம் கேட்டார்கள் கொடுத்தோம். வேலை கேட்ட பொழுது கொஞ்சம் பொறுங்க எலக்சன் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க என்றார்கள். ஆனால் சில காலத்தில் அப்படியே குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்கள். வீட்டை பூட்டி விட்டார்கள். அதன் பின்னர் பேப்பரில் செய்தியாக வந்தது. டெப்டி கலெக்டராக இருந்து ஓய்வுபெற்ற ஜெயபெருமாள், சிவகாமி அம்மாள் பிசிகல் டைரக்டர் என்று நினைக்கிறேன். இந்த பொண்ணு நிகிதா என்னுடைய ஸ்டூடன்ட். படித்தவுடன் கவர்ன்மென்ட் காலேஜில் பேராசிரியராக வேலை செய்கிறார். பல லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய நபர்கள் எனக்கு கஞ்சிக்கு வழியில்லை பணத்தை கொடுங்கள் என கேட்கும் பொழுது செத்தாலும் பரவாயில்லை ஒரு ரூபாய் கொடுக்க முடியாது என விரட்டி விட்டார்கள்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து போய் நிகிதாவிடமும் சிவகாமியிடமும் ஆலம்பட்டியில் உள்ள அவர்கள் வீட்டில் வைத்து பணம் கேட்கிறோம். கேட்கும் பொழுது கூட எங்களுக்கு சாப்பிடுவதற்கு கூட வழியில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களிடம் வாங்கிய பணம் பல கோடி ரூபாய் இருக்கிறது. என்னிடம் மட்டுமல்லாது ஆலம்பட்டியை சேர்ந்த முருகேசன், முத்துக்கொடி, வசந்தம் நகரில் உள்ள ஒரு பேங்க் எம்ப்ளாயி. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவரிடம் பையனுக்கு வேலை வாங்கி தருவதாக ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பணத்தை அவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். நிகிதாவுடைய காலேஜில் வேலை செய்த லேப் அட்டண்டர் பையனுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி நிகிதா பணம் வாங்கி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த செந்தில், தனசேகரன் ஆகியோரிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். நான் காலேஜ் பிரின்ஸ்பல் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் பட்டினியாக போயிருக்கிறேன் கல்லூரிக்கு. இந்த குடும்பம் என்னையும் சார்ந்த நபர்களையும் நாசமாக்கியது போல் அஜித்குமார் குடும்பத்தையும் நாசம் பண்ணி விட்டார்கள்'' என்றார் கண்ணீருடன்.