tamilisai Photograph: (bjp)
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ''ஒருபக்கம் இந்துக்களை ஸ்டாலின் திட்டிக்கொண்டே போகிறார்.. இன்னொரு பக்கம் உதயநிதி. உதயநிதியிடம் நான் கேட்கிறேன். பைபிள் கொள்கையும் திமுகக் கொள்கையும் ஒன்று என்று உதயநிதி சொல்கிறார். எல்லாரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம் என்று சொல்கிறார். உண்மையிலேயே எந்த கிறிஸ்தவ சகோதர சகோதரியும் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பைபிள் தூய்மையைப் போதிக்கிறது. சகோதரத்துவத்தை போதிக்கிறது. ஆனால் நீங்கள் சகோதரத்துவம் இல்லாமல் இந்துக்களை மாற்றான் சகோதரன் போல மாற்றான் தாய் மனப்பான்மையில் பார்க்கிறீர்கள்.
திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய திருவிழாவிற்கு கொடியேற்றியதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்களுக்கு காவல்துறையை வைத்துப் பாதுகாப்பு கொடுத்து கொடி ஏற்ற சொல்கீறீர்கள். ஆனால் அதே பாதுகாப்பை இந்துக்களுக்கு கொடுத்து அங்கு விளக்கு ஏற்ற வைத்திருக்க வேண்டுமா இல்லையா? அது மட்டுமல்ல உயர்நீதிமன்றத்திற்கு சென்று உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். அப்போது கூட வேண்டுமென்றே இந்துக்கள் விளக்கேற்றக் கூடாது இஸ்லாமியர்கள் கொடியேற்ற வேண்டும் என்றால் எந்த அளவிற்கு நீங்கள் பிரிவினையை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது ஒரு கலாச்சார போர். அந்த போரில் நாங்கள் நிச்சயமாக இந்த போரில் போட்டிப் போட வேண்டும், சண்டையிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
சும்மா எங்களைப் பார்த்து சிறுபான்மையினருக்கு எதிரானவர் எதிரானவர்கள் என்று சொல்லி நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாக இருந்து கொண்டு சிறுபான்மையினரை எச்சரிக்கிறார். நாங்க உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் அதனால் நீங்க எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏன் சிறுபான்மை மக்களை அதிகமாக இவர் இன்று தாஜா செய்து கொண்டிருக்கிறார் என்றால் இந்துக்கள் ஓட்டு எல்லாம் பாஜகவிற்கு போகப் போகிறது. சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியாக வைத்திருந்தோம். விஜய் போன்றவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். விஜய் வேற ஓட்டை பிரிச்சிருவாரே. நமக்கு எதுவும் இல்லாமல் போய்விடும் என்ற கவலையில் திரும்பத் திரும்ப சிறுபான்மை பாதுகாவலர் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மக்கள் இதை நம்பக்கூடாது. அவர்கள் ஓட்டு வங்கிக்காக மட்டுமே உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் இங்கே தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்'' என்றார்.
Follow Us