சென்னை காமராஜர் சாலையில் திடீரென திருநங்கைகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தின் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டனர். திடீரென அலுவலகத்தின் வெளியே உள்ள சாலைக்கு வந்த திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கண்ணகி நகர்ப் பகுதியில் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் கண்ணகி நகரில் தங்களுக்கான வாழ்வாதாரம் இல்லை. அங்கு வரும் சில நபர்கள் தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு தங்களை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ''அந்த பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதிகமானோர் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் எங்கள் பொருட்களைப் பாதுகாக்க முடியவில்லை. ஒரு நிமிடம் கூட எங்களால் அங்கு குடியிருக்க முடியவில்லை. வேறொரு பகுதியில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும்.  நான்கு வருடமாக அந்த வீட்டில் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. பாத்திரங்கள் எடுத்துச் சென்று குடும்பம் நடத்தினால் ஒரு நிமிஷம் கூட விடாமல்  ரவுடி பசங்க, பொறுக்கி பசங்க எல்லாவற்றையும் உடைத்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள்.

Advertisment

கண்ணகி நகருக்கு நாங்களே வருகிறோம் எங்களுக்கு எந்த மாதிரி வீடு கொடுத்திருக்காங்க என்று பாருங்கள். ஆண்கள் பெண்களுக்கு எல்லாம் முதலில் வீடு கொடுத்துவிட்டு எங்களுக்கு கடைசியில் வீடு கொடுத்திருக்கிறார்கள். கஞ்சா அடிப்பவர்கள் அராஜகம் அங்கு அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே லெட்டின், ஓன் பாத்ரூம் போய் வைக்கிறார்கள். நாங்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பிச்சை எடுத்து பொருள் வாங்கி வைத்தால் அதை உடைத்துவிட்டுப் போகிறார்கள். எந்த அரசாங்கமும் எங்களுக்கு செவிசாய்க்க மாட்டேங்குது'' என ஆவேசமாகப் பேசினர்.

இந்த போராட்டத்தால் உழைப்பாளர் சிலையிலிருந்து டிஜிபி அலுவலகம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.