இன்று திருச்சிக்கு சுற்றுப்பயணம் வந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி பேசுகையில், '' எல்லோருக்கும் வணக்கம். நான் பேசுவது கேட்கிறதா? அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்னாடி போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டுதான் போருக்கு போவார்களாம். அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்கப் போற ஜனநாயக போருக்கு தயாராகுவதற்கு முன் நம்ம மக்களை, உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணை தொட்டா நல்லது. சில நல்ல காரியங்களை ஒரு சில இடங்களில் இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.
அந்த மாதிரி திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய எடுத்துக்காட்டு இருக்கிறது. முதலில் அறிஞர் அண்ணா 1956ல் தேர்தலில் நிற்க வேண்டும் என்று நினைத்தது திருச்சியில் தான். அதன் பிறகு எம்ஜிஆர் அவருடைய முதல் மாநில மாநாட்டை நடத்தியதும் திருச்சியில் தான். நான் சொல்வது 1974. அது மாதிரி திருச்சிக்கு என்று நிறைய வரலாறு இருக்கிறது. நமது கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த இடம், மலைக்கோட்டை இருக்கும் இடம், கல்விக்கு பெயர் போன இடம், மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம், கொள்கை உள்ள மண் இது, அது மட்டுமல்ல இன்று உங்கள் எல்லோரையும் பார்க்கும் பொழுது..''. எனப் பேச திரென அவர் பேசிய மைக் வேலை செய்யவில்லை. தொழிநுட்ப கோளாறு காரணமாக அவரது பேச்சைக் கேட்க முடியவில்லை. இதனால் தொண்டர்கள் ''கேட்கவில்லை... கேட்கவில்லை..'' என கூச்சலிட்டனர்.
தொடர்ந்து விஜய் பேசுகையில், ''திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என சொன்னீர்களே செய்தீர்களா? கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே செஞ்சீங்களா? டீசல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னீர்களே செஞ்சீங்களா? அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு எனும் வாக்குறுதி என்ன ஆனது? அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? வரப்போகும் தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு போடுவீர்களா...?'' என தொண்டர்களை நோக்கி விஜய் கேட்கத், தொண்டர்கள் ''இல்லை... இல்லை...'' மற்றும் சத்தம் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய விஜய், ''நடைமுறைக்கு எது சாத்தியமோ அதை மட்டுமே நாங்கள் சொல்வோம். அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் நோ காம்ப்ரமைஸ். மகளிர் விடியல் பயணம் என அறிவித்து அதில் பயணிக்கும் பெண்களை அவமானப்படுத்துகின்றனர். மகளிர் உதவி தொகையையும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம்.... ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டோம்... என கொச்சைப்படுத்துகிறார்கள்'' என்றார்.