'There will be no water... no food... will you stand in the sun for 6 hours for Vijay?' - Thaweka administrator's speech Photograph: (salem)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
தவெகவிற்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பரப்புரைக்கு தவெக தீவிரம் காட்டி வருகிறது. வரும் பிப்.13 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக சேலம் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிகோரி சேலம் தவெக நிர்வாகி பார்த்திபன் காவல் ஆணையரகத்தில் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தவெக சேலம் மாவட்டச் செயலாளர் பார்த்திபன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ''வரும் பிப்.13 ஆம் தேதி மதியம் 12 முதல் மாலை 3 மணிவரை விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனையொட்டி எங்கள் கட்சியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் 600 பேர் வந்துள்ளார்கள். அவர்களிலிருந்து 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற சிவகுமார் தலைமையில் அனைவருக்குப் பயிற்சி நடைபெற்றது'' என்றார்.
முன்னதாக அங்கு கூடியிருந்த தன்னார்வலர்கள் மத்தியில் தவெக நிர்வாகி பார்த்திபன் பேசுகையில், ''வெயிலில் நிற்க வேண்டும் நிற்பீர்களா? 5 மணி நேரம் இல்லை 6 மணிநேரம் விஜய்க்காக வெயிலில் நிற்ப்பீங்களா? தண்ணீர் குடிக்க முடியாது; சாப்பாடு சாப்பிட முடியாது, ஸ்ட்ரென்த்தா இருப்பீர்களா? நமக்கு என்ன முக்கியம் விஜய் மற்றும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். ஆர்வம் மிகுதியில் மக்கள் விஜய்யை பார்க்க ரோட்டில் வருவார்கள், கிரவுண்டுக்கு வெளியே வருவார்கள். பக்கத்தில் மலை இருக்கிறது. விஜய்யை பார்க்க ஆர்வத்தில் மலைமீது கூட ஏறி வருவார்கள். அப்போது நீங்கள்தான் போய் பார்த்துக்கொள்ள வேண்டும்' எனப் பேசினார்.
Follow Us