வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேதுக்கரை பகுதியில் கிளை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு பாஸ்போர்ட் வந்துள்ளது. 

Advertisment

அந்த பாஸ்போர்ட் புக் உடன் அஞ்சல் ஊழியர் பொன்னம்பட்டி பகுதியில் உள்ள அஜய் என்பவரின் குடும்பத்தை அணுகியுள்ளார். அதைத் தருவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை ஆய்வு செய்து அவரிடம் படிவத்தில் கையெழுத்துப் பெறும்போது கையெழுத்து மாறி வந்ததால் அஞ்சல் ஊழியருக்கும் அஜய் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

அதன்பின்னர் தபால் ஊழியரை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் ஊரைச் சேர்ந்த சிலர் இதெல்லாம் தப்பு எனச் சொல்லி அவரின் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சென்ற அஞ்சல் ஊழியருக்கும் பாஸ்போர்ட் வாங்குபவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பானது. இந்தத் தகவல் போலீசாருக்கு சென்றதால் குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அஜயிடம் கேட்டபோது, அஞ்சல் ஊழியர் தான் மது போதையில் என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, தனது தாயின் துணியைப் பிடித்து இழுத்ததாகக் கூறுகிறார்.இதுபற்றி அஞ்சல் ஊழியரிடம் கேட்டபோது, அஜய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சல் ஊழியரைத் தாக்கியதாகவும் தனது கையைப் பிடித்து வாயில் மது ஊற்றி தன்னை மரத்தில் கட்டி வைத்ததாகவும் தெரிவித்தார்.தற்போது இந்த விவகாரம் குறித்து வேலூர் மண்டல தபால் அலுவலக உயரதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment