தமிழக அரசுக்கு சொந்தமான கேபிள் டி.வி. கார்ப்பரேசனில் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், சில தொலைக்காட்சிகளை ஒளிப்பரப்புவதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்.
இது குறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கோரிக்கையில், " இந்திய அரசியல் சட்டப்படி உரிமம் பெற்று, இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதல்படி செயல்படும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பேணிக் காக்கும் வகையில் அரசு கேபிள் டிவியில் அனைத்து தொலைக்காட்சிகளையும் இணைக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, சில தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளை தமிழக முதல்வராகிய நீங்கள் பாதுகாக்க வேண்டும். எந்த ஊடகங்களையும் அரசியல் உள்நோக்கம் இன்றி பிரித்துப் பார்க்காமல், ஊடகங்களின் கடமைகளை மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகத்தின் உயர் தரத்தைப் பராமரிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு மட்டுமின்றி ,இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதலின்படி செய்திகளை முழுமையாகவும் பொறுப்புடனும் செயல்படுத்துவதை தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் தடுக்காமல் ஊடகங்கள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் சட்டப்படி உரிமம் பெற்று, இந்திய பத்திரிகை கவுன்சில் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழ் ஜனனம் தொலைக்காட்சியை அரசு கேபிளில் சட்டப்படி உடனடியாக நினைக்க வேண்டும். தமிழக மக்களுக்கு இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள தமிழ் ஜனனம் தொலைக்காட்சியை பார்ப்பதற்கான காட்சி உரிமையை பறிக்கக் கூடாது. ஊடகங்கள் சுதந்திரமாகவும், பயமின்றியும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும். தமிழக முதல்வர் அவர்கள், உடனடியாக இந்த பிரச்சினையை தலையிட்டு அனைத்து தகுதி வாய்ந்த தொலைக்காட்சிகளுக்கும் அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பில் தொடர அனுமதி வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் ஏ.என்.எஸ்.பிரசாத். கோரிக்கை வைத்திருக்கிறார்.