கடலூர் நீதிமன்றத்திற்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு ஒன்றுக்கு சாட்சியம் அளிப்பதற்காக வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''2017 ஆம் ஆண்டு பாஜகவின் தமிழக மாநில தலைவராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆபாசமான முறையில் என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
அது குறித்த வழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளேன். இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பெண் தலைவர்கள் மீது பதிவு செய்தால் பெண்கள் அரசியலுக்கு வருவது பாதிக்கும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் ஒரு பெண் தலைவர் என்றும் பாராமல் இப்படி சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து வருவதை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
பெண்களுக்கு தமிழகத்தில் தரையிலும், முகநூலிலும், இணையத்திலும் பாதுகாப்பில்லை. பெண்களை இழிவாக நடத்துவது அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விளம்பரம் தான் அதிகமாக உள்ளதே தவிர பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க நடவடிக்கை இல்லை'' என்றார்.