இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''அடுத்து மலைகளின் மாநாடு நடத்த இருக்கிறோம். 'மலைவளமே மண்வளம்' என தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இருக்கிறோம். அதனையடுத்துக் 'கடலம்மா' மாநாடு தூத்துக்குடியில் நடத்த இருக்கிறோம். அதனையடுத்து தண்ணீரின் மாநாடு தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது. ஐம்பெரும் ஆற்றல் இல்லாது நீங்கள், நாங்கள் என யாருமே இல்லை'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவர் ஆனது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ''அதில் ஒன்றும் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழர், கன்னடர் என்றெல்லாம் இல்லை அவர் பாஜகவை சேர்ந்தவர் பாஜகவினுடைய கோட்பாடு என்னவோ, ஆர்எஸ்எஸின் கோட்பாடு என்னவோ அதன்படி தான் சி.பி.ராதாகிருஷ்ணன் இயங்குவார். அவர் ஆர்எஸ்எஸில் பயிற்சி எடுத்தவர். அந்த சித்தாந்தப்படி தான் அவர் இயங்குவார். தமிழராக இருந்தால் மட்டும் அங்கிருந்து இந்தி திணிப்பை எதிர்த்து விடுவாரா அல்லது மும்மொழி கொள்கையை எதிர்த்து விடுவாரா? நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லி விடுவாரா? இல்லை. பாஜக என்ன கொள்கை வைத்திருகிறதோ அதைத்தான் அங்கு கடைப்பிடிப்பார். தெரியாத ஒரு வடமாநிலத்தவர் துணை ஜனாதிபதியாக வருவதற்கு இவர் ஒரு தெரிந்த தமிழர் என்பதுதானே அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது மரபு அதற்காகத்தான் அந்த வாழ்த்து'' என்றார்.
'விஜய் சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்' ஒரு கேள்விக்கு, ''அது அவருடைய முடிவு. அது அவங்க கட்சி. அவர்கள் ஒரு முடிவு செய்கிறார்கள். அதில் நாம் என்ன கருத்துச் சொல்ல முடியும். அது என்னுடைய விருப்பம் என விஜய் சொல்லி விட்டால் என்ன பண்ணுவது. அதில் கருத்துச் சொல்ல முடியாது'' என்றார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று ஒருவர் சொல்வார். இமானுவேல் சேகரன் பெயரை வைக்கலாம் என்று ஒருவர் சொல்வார். இருவருமே நம் தாத்தாக்கள் தான். ஆனாலும் சமூகத் தலைவர்களின் பெயர்களை வைப்பதற்கு பதிலாக பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்'' என்றார்.