கடந்த 11/09/2025 அன்று விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், ''பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்படுகிறார். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. இந்த முடிவு பாமகவிற்கு எந்த பின்னடைவும் இருக்காது. வளர்ச்சிக்கு தடையாக இருந்த களையை நீக்கிவிட்டேன்'' என தெரிவித்திருந்தார்.
ராமதாஸின் இந்த முடிவை எதிர்த்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, ''பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது என எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினுடைய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பு கட்சிக்கு விதிகளுக்கு எதிரானது. பாட்டாளி மக்கள் கட்சியை எந்த விதத்திலும் ராமதாஸின் அறிவிப்பு கட்டுப்படுத்தாது. கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்ந்து வருகிறார்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (15/09/2025) தி நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் பாலு பேசுகையில், ''அன்புமணி உடன் இருக்கும் பொறுப்பாளர்கள் தான் கட்சி நிர்வாகிகள். நான் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அந்த அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
சென்னை தி நகரில் உள்ள அலுவலகம் தான் பாமகவின் தலைமையில் அலுவலகம். அன்புமணிக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா உள்ளனர். அன்புமணியை தலைமை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பாமக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும்'' என்றார்.
இந்நிலையில் அன்புமணி தரப்புக்கு பதிலளிக்கும் வகையில் பமாக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'ராமதாஸ் இருக்கும் இடம் தான் பாமக. எப்படி ராமர் இருக்கும் இடம் அயோத்தியோ அதேபோல் ராமதாஸ் இருக்கும் இடம்தான் பாமக. ராமதாஸ் இடமிருந்து கட்சியையும் வன்னிய மக்களையும் பிரித்து விடலாம் என ஒரு குழு காத்திருக்கிறது. பாலு வெளியிட்ட கடிதத்தில் உண்மைத் தன்மை இல்லை. செயல் தலைவருக்கு பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் இல்லை. கட்சிக் கொடியை வடிவமைத்தவர் ராமதாஸ். எனவே கொடியைப் பயன்படுத்தும் அதிகாரம் அவருக்கே உள்ளது'' என்றார்.