ரூ.2.78 கோடியில் அரசு கட்டிய திருமண மண்டபம்; ‘கழிப்பறை எங்க சார்..?’ - தேடும் பொதுமக்கள்!

102

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதூர் செங்கத்தில், பிரபலமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழர்கள் வந்து பொங்கல் வைத்து, ஆடு அல்லது கோழி பலியிட்டு, சுவாமி தரிசனம் செய்கின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அதிகாரப்பூர்வமற்ற வகையில், கோவிலுக்கு வெளியே மக்கள் திருமணங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், கோவிலுக்கு சொந்தமான பரந்து விரிந்த இடத்தில் 2.78 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி, சென்னையிலிருந்து காணொலி வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

100

பின்னர், தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில், புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த மண்டபம் ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து திருமணத்தைக் காணும் வகையிலும், 500 பேர் உணவு உண்ணும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு ஏசி வசதியுடன் கூடிய அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு விசாலமாகக் கட்டப்பட்ட இந்தத் திருமண மண்டபத்தில், ஒரு கழிவறைகூட அமைக்கப்படவில்லை என்பது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு பக்தர், “திருமணம், காதுகுத்து போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பொதுமக்கள் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மண்டபத்தில் இருப்பார்கள். உறவினர்கள் என்றால் மாலை முதல் காலை வரை இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால்கூட ஒரு கழிவறை இல்லை. இப்படி ஒரு மண்டபத்தைக் கட்டுவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே மண்டபத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்தைத் தயாரித்து, ஐந்து அதிகாரிகளைக் கடந்து அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் டெண்டர் விடப்பட்டு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த அறிவு இருந்திருந்தால்கூட, கழிவறை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். ஆனால், இதைச் செய்யத் தவறியது எப்படிப்பட்ட மனநிலையைக் காட்டுகிறது என நீங்களே யோசித்துப் பாருங்கள்,” என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

99

திறப்பு விழாவுக்குப் பின்னரும், தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், திறப்பு விழா முடிந்து, பொருட்கள் வாங்கி வைக்கப்பட்ட பின்னரும், இந்த மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தலாம் என்பதால், பொதுமக்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், தனியார் மண்டப உரிமையாளர்கள் தங்கள் மண்டப வாடகையைக் குறைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது,  “பாத்ரூம் வசதி இல்லாத மண்டபத்த புக் செய்து என்ன செய்யப்போறிங்க...” என நக்கல் அடித்து, தனியார் மண்டப உரிமையாளர்கள் கோவில் மண்டபத்தைப் புக் செய்ய முயலும் ஒரு சிலரைத் திசைதிருப்பி, கட்டணத்தை உயர்த்திக் கேட்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

tiruvannamalai tngovt Wedding
இதையும் படியுங்கள்
Subscribe