'There is no point in talking about those who may remember the election Pongal' - Kanimozhi interview Photograph: (dmk)
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. நேற்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் அண்மையில் வெளியான பராசக்தி படத்தில் நடித்திருந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நாம் நமது பொங்கலை பற்றி நாம் பேசுவோம். தேர்தலுக்கு தேர்தல் பொங்கல் நினைவு வரக்கூடியவர்களை பற்றி பேசிப்பயனில்லை. மக்களுக்கு அவர்கள் யார் என்று மிகத் தெளிவாக அடையாளம் தெரியும். அதனால் மக்கள் இதையெல்லாம் நம்பி ஏமாறக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. நான் இன்னும் பராசக்தி படம் பார்க்கவில்லை.
தேர்தலுக்கு தேர்தல் தமிழர்களைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் மொழியைப் பற்றிப் பேசக்கூடியவர்கள், இந்தியை கொண்டுவந்து தமிழ்நாட்டில் திணிக்க கூடியவர்கள், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியைத் தராதவர்கள் எல்லாம் திடீரென்று தேர்தல் வந்தவுடன் தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு நினைவு வரும் பொழுது அவர்கள் யார் என்பது தமிழர்களுக்கு தெளிவாக தெரியும். தமிழ் மக்கள் ஏமாற தயாராக இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதாக தமிழக முதல்வர் தெளிவாகச் சொல்லிவிட்டார். முதலில் எடுக்கப்பட்ட கலைஞரின் பராசக்தி படமே சென்சாரில் எந்த அளவிற்கு பாடுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தொடர்ந்து சென்சார் என்பது ஒரு டூலாக மாற்றப்படும் பொழுது மக்களுக்கு எதிரான ஒன்றாகவும், ஆளுங்கட்சியின் கையில் இருக்கக்கூடிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சர் அதற்குக் கருத்து தெரிவித்து இருக்கிறார்'' என்றார்.
Follow Us