'There is no other purpose' - Sengottaiyan interviewed at Coimbatore airport Photograph: (ADMK)
அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 05/09/2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் செல்வராஜூக்கு செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்களை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் செங்கோட்டையன் கருத்தை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையன் திடீரென டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்லும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாகவே எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண் காரணமாக நிர்மலா சீதாராமனை டெல்லியில் அவர் சந்தித்திருந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி செல்வது அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ''நான் ராமர் கோவிலில் தரிசிப்பதற்காக ஹரித்துவார் செல்கிறேன். கட்சியில் அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். வேறு நோக்கம் எதுவும் இல்லை. வேறு நோக்கத்தில் இருந்தால் நான் அதை சொல்லி இருக்க மாட்டேன். தொண்டர்கள் வந்து எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். நீங்கள் தைரியமாக இருங்கள் என சொல்லிவிட்டு போகிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.