கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் நாகேஸ்வர் ராவ் (65). முன்னதாக இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தனது மனைவியுடன் தி விர்ச்சுவோசோ அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர்களது ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதனிடையே, மன அழுத்தப் பிரச்சனையின் காரணமாக, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார். தொடர் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று (18.02.2026) காலை 11 மணியளவில் தனது மனைவி சந்தியா ஸ்ரீயை ஒரு துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு, தனக்குத் தெரிந்த நபரைத் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறைக்குச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சமையலறையில் சந்தியா ஸ்ரீ கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். பின்னர், வீட்டினுள் ஒரு சோபாவில் அமர்ந்திருந்த நாகேஸ்வரிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர், “அது என் மனைவி தான். நான் தான் அவரை கொன்றேன். எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. எனது இறப்பிற்குப் பிறகு, அவளைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. நான் இல்லாமல், அவள் தனிமையில் வாழ்வது கடினமானதாக இருக்கும் என்பதால் அவளைக் கொன்றேன்" எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து ஒயிட் பீல்டு துணை காவல் ஆணையர் சைதுலு அதாவத் கூறுகையில், "நாகேஸ்வர் ராவ் மன அழுத்தம் உள்ளவர். இதனால், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே நேரத்தில், அவருக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்துள்ளது.
எனவே, தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது மனைவியைக் கொன்றுள்ளார். இது தான் காரணம், இதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை" என்று தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இது குறித்து அமெரிக்காவில் உள்ள அவரது மகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us