பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.  இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதேசமயம் ராமதாஸுக்குப் போட்டியாக  ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 'தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுகிறார். மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று (08.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் தனது அறையில் இன்று மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அனைவரின் நலனுக்காக இருவரிடமும் தனித்தனியாகப் பேச உள்ளேன். உடனடியாக ராமதாஸைக் கிளம்பி வரச் சொல்லுங்கள். இருவரையும் சந்திக்கும் போது கட்சிக்காரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அன்புமணி இன்று ஆஜராவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் 'உடல்நலக்குறைவு காரணமாக வர முடியாததால் தான் காணொளியில் ஆஜராக விருப்பம்' என ராமதாஸ் தெரிவித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு  வழக்கறிஞர் கோபு தெரிவித்தார்.

Advertisment

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் 'ராமதாஸ் காணொளியில் ஆஜரானால் ஏற்கிறேன்' என ஒப்புதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராமதாஸ் காணொளி காட்சியில் ஆஜரானார். இருவரிடமும் சுமார் ஒரு மணிநேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். அன்புமணி தரப்பில், கட்சி சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது. நிறுவனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவனர் ராமதாஸுக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கில் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தலையிடப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ராமதாஸ் மற்றும் அன்புமணி தன் தரப்பு கருத்துக்களை நீதிபதி முன், வைத்த நிலையில் விசாரணை முடிந்து அன்புமணி கிளம்பினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 'நாளைய பொதுக்குழுவுக்கு தடை இல்லை வாருங்கள் சொந்தங்களே பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்' என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும்  தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.

Advertisment

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும்  சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில்  விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே!' என தெரிவித்துள்ளார்.