தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (02.03.2026) சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நேற்றைய தினம் இரவு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்திலே சந்தித்து தமிழ்நாட்டின் அரசு அரசியல் நிலவரம் குறித்துக் கலந்து பேசினோம். இனி தேர்தலில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றும் கலந்து ஆலோசித்தோம். சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அந்த கட்சிகள் கூட்டணியில் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சசிகலா கட்சி ஆரம்பித்தது குறித்து எதுவும் பேசவில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் மிகச் சிறப்பாக எழுச்சியாகக் கூட்டணி அமைத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு விரைவாக ஆரம்பிக்கப்படும். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை.
திமுக கூட்டணியில் தான் குழப்பம் இருக்கிறது. காங்கிரஸும், திமுகவும் கூட்டணியில் இருக்குமா? இல்லையா?. இது தொடர்பாகப் பத்திரிகை, ஊடகத்தில் வருகின்ற செய்தியை வைத்துக் கணிக்க முடிகிறது. அங்குதான் கூட்டணியில் பிரச்சனை இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றாக இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. வருகின்ற தேர்தல்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமைக்கப்படுகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/eps-dl-pm-2026-03-03-10-59-18.jpg)