வரும் நவம்பர் 26-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (நவம்பர் 22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
நாளை (நவம்பர் 24) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெற்று, நவம்பர் 26 அன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயல் உருவானால் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்தபடி அதற்கு ‘சென்யார்’ (Senyar) என்று பெயர் சூட்டப்படும்.இதன் தாக்கத்தால் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
Follow Us