There are many more says by Sengottaiyan, who kept things suspenseful
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் 10 நாட்களுக்குள் இதை செய்யவில்லை என்றால் ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5ஆம் தேதி பேசி தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கு பனிப்போர் நிலவி வந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கெடு விதித்திருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில் திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, திடீரென டெல்லிக்கு பறந்த செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதனிடையே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து செங்கோட்டையன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று (24-09-25) சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இந்த சந்திப்பின்போது இருவரும் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் இல்லத்திலேயே செங்கோட்டையனுக்கு மதிய விருந்தும் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. தமிழ்நாடு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கக் கூடாது, அப்படி நடந்தால் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரத் தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில் அவரை செங்கோட்டையன் சந்தித்ததாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இன்று (25-09-25) சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என்னுடைய மனைவி சென்னையிலே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆகவே அது சம்பந்தமாகத்தான் சென்னைக்கு சென்றேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பி இருக்கிறேன். அரசியல் ரீதியாகவோ மற்ற ரீதியாக யாரையும் நான் சந்திக்கவில்லை. அதுபோன்ற ஒரு தவறான செய்திகள் வந்தவுடன், பல்வேறு தொலைக்காட்சி நண்பர்களுக்கு நான் சொந்த வேலையாக சென்றிருக்கிறேன், என் மனைவியை பார்த்துவிட்டு நான்திரும்புகிறேன் என்று தெளிவாக கூறினேன்.
என்னை பொறுத்தவரையிலும் இந்த இயக்கம் வலுமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான் எனக்கு இருக்கிது. எம்.ஜி.ஆர் கண்ட கனவு, நூற்றாண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா கூறிய அந்த கனவை நிறைவேற்றுவதற்கு இந்த இயக்கத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இந்த இயக்கம் வழிபெற வேண்டும் நோக்கத்தோடு தான் அன்றைய தினம் இந்த செய்தியை நான் வெளியிட்டேன். ஆகவே எங்களைப் பொறுத்தவரையிலும் குறிக்கோள் ஒன்றுதான். நேற்றைய தினம் யாரையும் நான் சந்திக்கவில்லை, சந்தித்ததும் இல்லை. அரசியல் ரீதியாக யாரிடத்திலும் நான் பேசவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். பல்வேறு நண்பர்கள் எங்களிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அதை பற்றி யார் என்னிடத்தில் பேசினார் என்பது சஸ்பென்ஸ், வெளியிட இயலாது. எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது என்பதைத்தான் அது எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து, ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவிர அதிமுக மூத்த நிர்வாகிகள் உங்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரேனும், இந்த கருத்துக்கு உடன்பாட்டோடு இருக்கிறார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது. அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பது தான் சரியாக இருக்குமே தவிர, யார் பேசினார்கள் யார் பேசவில்லை என்பதை இப்போது சொல்வதற்கு வாய்ப்பில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம், நல்லதே நடக்கும்” என்று கூறினார்.