வாழ்வில் ஒரு முறையாவது காசிக்குச் சென்று வருவதே மோட்சம் என்றிருக்கும் நிலையில் அங்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்க முடியாத அளவுக்கு வசதியற்ற பக்தர்கள், ஆன்மீகவாதிகள் தெற்கேயுள்ள தென்காசி நகரில் மிகப் பெரிய ஆலயமாக வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை தரிசித்து வருவதையே பிறவிப் புண்ணியமாகக் கருதுகின்றனர். மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி என்பதால் அந்த ஆலயத்திற்கு தமிழகம் எங்குமிருந்தும் வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடியே இருக்கிறது.
அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதரின் கண்களையே கட்டியிருக்கிறார்கள் அங்குள்ள அர்ச்சகர்கள் எனப்படுகிற பூசாரிகள். ஆலயத்திற்கு உபயமாக வந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது பற்றி காவல் நிலையம் வரை புகாரானதுதான் தென்காசி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியும் பரபர டாப்பிக்குமாகியிருக்கிறது.
மிகப் பிரபலமான தென்காசி காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 07.04.2025ல் மாவட்டமே கொண்டாடும் வகையில் சீரும் சிறப்புமாக நடந்திருக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக பக்தர்கள் பல லட்சங்கள் நன்கொடையாகவும், வெள்ளி மற்றும் சில்வர் குடங்கள், வாளிகள், பித்தளை மற்றும் சில்வர் கரண்டிகள், விலையுயர்ந்த சால்வைகள் என்று லட்சங்கள் தாண்டிய மதிப்புள்ள பொருட்களை உபயமாகவும் கொடுத்தனர். இந்தப் பொருட்கள் அனைத்தும் கோவிலின் அம்மன் சன்னிதியிலுள்ள மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் இந்த ஆலையத்தின் செயல் அலுவலராக பொன்னி என்பவர் பணி மாறி வந்திருக்கிறார்.
பொறுப்பேற்றவுடன் இந்தப் பொருட்களையெல்லாம் செயல் அலுவலர் பார்வையிட்ட போது அவைகள் சரியாக இருந்திருக்கிறது. கடந்த 21.8.2025 அன்று இரவு 7 மணிக்கு தற்செயலாக மடப்பள்ளிக்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்கள் இல்லை. இதனால் அதிர்ச்சியான இ.ஓ. கோவிலில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தபோது கடந்த 10.08.2025 அன்று காலை 6 மணிக்கு கோவிலில் தற்காலிக அர்ச்சகராகப் பணிபுரியும் நடன சபாபதி கோவிலின் பக்தரான ஹரி, தென்காசியைச் சேர்ந்த தினேஷ், கீழப்புலியூரின் கனேசன் ஆகியோர் பெரிய அட்டைப்பெட்டிகள் மற்றும் சாக்குகளில் காணிக்கைப் பொருட்களை கோவிலின் தெற்கு வாசல் வழியாக ஒரு ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து 22.8.25 அன்று இ.ஓ. பொன்னி தனது பணியாளர்களுடன் நடன சபாபதி மற்றும் ஹரி இரண்டு பேரையும் விசாரித்திருக்கிறார். அப்போது கோவிலின் முதன்மை அர்ச்சகரான செந்தில் ஆறுமுகம் என்கிற செந்தில் பட்டர் தான் காணிக்கைப் பொருட்களை எடுத்துவரச் சொன்னதால்தான் நாங்கள் அந்தப் பொருட்களை எடுத்து அர்ச்சகர் வீட்டிற்கு கொண்டு சென்றோம் என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்திருக்கிறார் இ.ஓ.
அதையடுத்து பக்தர்கள் உயமாகத் தந்த மேற்படி காணிக்கைப் பொருட்களின் மதிப்பு 1.95 லட்சம் மதிப்புடையது. எங்கள் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்தப் பொருட்களைத் திருடிச் சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இ.ஓ. பொன்னி தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெசய்திருக்கிறார். அதன் அடிப்படையில் எஸ்.ஐ.யான முருகேஸ்வரி, முதன்மை அர்ச்சகரான செந்தில், தற்காலிக அர்ச்சகர் நடன சபாபதி, ஹரி, தினேஷ், கனேசன் ஆகிய ஐந்துபேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சம்பவம் மாவட்டத்தை அதிரவைத்திருக்கிறது.
தென்காசி மாநகரமே தகிக்கிற அளவுக்கு ஆலயப் பொருட்கள் திருடு போனது பற்றி ஆலயம் மற்றும் பிற பகுதிகளில் விசாரித்த போது, இந்த திருட்டுச் சம்பவத்தோடு பிற வகையான ஆலைய முறைகேடுகளும் வெளிப்பட்டது.
ஆலயத்தின் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படுவதற்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடத்திருக்கிறது. மூத்த அர்ச்சகர்கள் ஓய்வு பெற்ற நிலையில், கோவிலின் முதன்மை அர்ச்சகரான செந்தில் பட்டர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். முன்னாள் செயல் அலுவலர்களோடு கூட்டணி வைத்துக் கொண்ட அவர்தான் ஆலயம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் கும்பாபிஷேக செயல்பாடுகள் போன்ற அனைத்தையும் தீர்மானிப்பவராக இருந்திருக்கிறார். கும்பாபிஷேக திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலம்தான் நடத்தப்பட்டது. அந்தப் பணிகள் யார் யாரிடம் கொடுக்கப்பட்டது எவ்வளவு என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. அதே போன்று கும்பாபிஷேகத்திற்காக வசூல் செய்யப்பட்ட பொருட்கள், நன்கொடை விபரமும் வெளியிடப்படவே இல்லையாம். இவையனைத்தும் செந்தில் பட்டர் வசமே இருந்திருக்கிறதாம். புனரமைப்புப் பணிகளில் நிர்வாக முறைகேடுகள் மற்றும் அப்பணியின் போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் வெட்டி அள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறது. இந்த மணல் கொள்ளை விவகாரம் காரணமாக முந்தைய இ.ஓ. முருகன் கும்பாபிஷேகத்திற்கு முன்பே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பணிகளுக்கு ஒரே வேலைக்கு பல உபயதாரர்கள் நன்கொடை கொடுத்துள்ளார்கள். அதிலும் முறைகேடுகள். ஏராளமான உபயதாரர்களிடம் பெறப்பட்ட நன்கொடை தொகைக்கு ரசீதே வழங்கப்படவில்லை. ஆலயத்தின் அங்கீகாரமற்றவர்கள் கூட நன்கொடைகள் வசூல்செய்யததாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கும்பாபிஷேகம் தொடர்பான பணிகள் உபயதாரர்கள் யார் என்பதையும் செந்தில் பட்டரே முடிவு செய்வாராம். கும்பாபிஷேகம் தொடர்பான அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டால் ஊழல் முறைகேடுகள் வெளியே வந்துவிடும் என்று அவைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அதை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இப்போது ஏன் புகார் தருகிறார்கள் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். செந்தில் பட்டரின் இச்செயலுக்கு இதற்கு முன் பணியிலிருந்து கனபதி உள்ளிட்ட செயல் அலுவலர்கள் பலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். நடவடிக்கைத் தேவையென சிவனடியாரின் திருக்கூட்டம், உழவாரப் பணிக்குழு, விளக்கு பூஜை கமிட்டி, ஆலயப் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல அமைப்புகள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையில்லை. அரசு விசாரணை குழு அமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது அந்த அமைப்புகளிடம்.
முதல் இருவர் பிடிபட்ட நிலையில் செந்தில் பட்டர் மற்றும் நடன சபாபதி தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து ஆலயச் சொத்து மீட்புகுழு அமைப்பின் நிர்வாகியான சங்கர சுப்பிரமணியனை சந்தித்த போது அவர் நம்மிடம், இந்த ஆலயத்திற்கு டோனர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் உபயமானது யாரிடம் கொடுப்பது என்ற வரமுறையே கிடையாது. இதுதானே முறைகேட்டிற்கு வாய்ப்பாகிவிட்டது. கும்பாபிஷேக வரவு செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டது செந்தில் பட்டர் தான். ஒரு உபயதாரர் 20 லட்சத்திற்கு ஆலயத் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்று நிதி கொடுக்கிறபோது அந்தப் பணியை பட்டர் சொல்பவர்களிடம் தான் தரப்படும். இதற்கு இ.ஓ.வும் உடந்தை. இப்படியொரு கூட்டு. இதைபற்றிய விவரங்கள் வெளியிடப்படாததால் பணி எப்படி இருக்கும். இது கண்டுபிடிக்கமுடியாத உழல். இதுபோல் கோடிக் கணக்கில் வேலைகள் நடந்திருக்கிறது. யாகசாலை பூஜைக்காக டோனர்கள் பல வெள்ளிக் குடங்களை உபயமாகக் கொடுத்திருக்கிறார்கள. அவைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. டோனர்கள் எப்படி வருகிறார்கள் போகிறார்கள் என்பதையே ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இதுபற்றி நிர்வாகம் மற்றும் அரசிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆலய நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையில்லை. பூடகமாகவே இருக்கிறது. எங்கள் அமைப்பின் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். நீதிமன்றமும் கண்டிச்சிருக்கு.
தவிர இப்போது திருடு போனது என்று புகார் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சமாகும். ஆனால் புகாரில் அவைகள் குறைத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. அரசு விசாரணைக் கமிஷன் மூலம் முறையான விசாரணை நடத்தினால் கொள்ளை பூதங்கள் வெளியேறும் என்றார் கனத்த குரலில்.சிவன் சொத்து குல நாசம் சாமீய்.