புதுக்கோட்டை நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணி செய்பவர் சம்யுக்தா (28). இவர் திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் பிளாக் நம்பர் 24 ல் குடியிருந்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றபோது வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு சென்றவர் மதியம் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது சாவியை காணவில்லை. தான் வைத்த இடத்தில் சாவியை காணாததால் சந்தேகமடைந்து உடனே வீட்டு பூட்டை உடைத்து கதவுகளை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க தாலி சங்கிலி, 1 சவரன் சின்ன தங்கச் சங்கிலி மற்றும் வைரத் தோடு ஒரு ஜோடி ஆகியவை காணாமல் போய் இருந்தது. சம்பவம் குறித்து உடனே அருகில் உள்ள திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதல்கட்ட தகவல்களை பெற்று கைரேகை பதிவுகள் எடுக்க தடயவியல் அலுவலர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
மேலும், காவலர் வருவதற்கு சில மணி நேரம் முன்பு அந்தப் பக்கம் ஊதா நிற சீருடையில் 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 3 பேர் முன் வழியாகச் சென்றவர்கள் சிறிது நேரத்தில் பின்பக்கமாக வேகமாகச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த 3 பேர் யார் என்று போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். பகல் நேரத்தில் பலர் பார்த்திருந்த நேரத்தில் சென்ற 3 பேரையும் பார்த்தால் அடையாளம் தெரிந்துவிடும் என்றும் விரைவில் நகை திருடர்கள் சிக்குவார்கள் என்றும் நம்பிக்கையாக உள்ளனர் போலீசார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் வீடுகளை குறிவைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களால் காவல்துறையே ஆடிக்கிடக்கிறது. இன்று மதிய நேரத்தில் நகரை ஒட்டியுள்ள திருக்கோகர்ணம் காவலர் குடியிருப்பில் போலீசாரின் வீட்டைத் திறந்து தங்க நகைகள், வைரத்தோடு திருடப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.