திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு தொடங்கி வைத்த இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது பழைய கனவுக்கு உயிர் கொடுத்த பெண்ணை, அமைச்சர் பாராட்டி, சல்யூட் அடித்து வாழ்த்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ‘மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் (15 வயது முதல் 70 வயது வரை) பங்கேற்றுள்ளனர். இதில் சிறு தொழில், உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருள்கள், செயற்கை நுண்ணறிவு (AI), அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/tha2-2025-11-26-21-50-55.jpg)
இந்நிலையில், மகளிர் சுய தொழில் முகாமை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, செயற்கை நுண்ணறிவு மூலம் தனது கனவிற்கு உயிர் கொடுத்த பெண்ணைப் பாராட்டினார். செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வகுப்பில் கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி பங்கேற்றார். இவர் சிறு வயது முதலே காவல்துறை அதிகாரியாக ஆகவேண்டும் என்ற இலக்குடன் முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், உயரக் குறைவு காரணமாக காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில் சேரமுடியவில்லை. மேலும், வறுமையால் படிப்பும் தடைபட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதி அரசுப் பணி பெற முயற்சித்து வருகிறார். தனது பழைய கனவை நினைவுகூர்ந்த முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தான் காவல்துறை சீருடையில் இருப்பது போலவும், ‘என் பெயர் முத்துலட்சுமி, நான் காவல்துறை அதிகாரி’ என்று பேசுவது போலவும் ஒரு சிறிய வீடியோவை உருவாக்கினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/tha3-2025-11-26-21-51-10.jpg)
இந்த வீடியோவைப் பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகப்படுத்தினார். உடனடியாக முத்துலட்சுமியை மேடைக்கு அழைத்துப் பாராட்டிய அமைச்சர், கண்ணீருடன் வந்த முத்துலட்சுமியைப் பாராட்டி, விரைவில் அரசுப் பணியை பெறுங்கள் என்று சல்யூட் வைத்து வாழ்த்து தெரிவித்தார். முத்துலட்சுமி மூன்று நாள் பயிற்சியில், தானே தயாரித்த திணை மாவு லட்டு, தையல் பயிற்சியில் தைத்த துணிப்பை, சிறுதொழில் பயிற்சியில் செய்த இயற்கை சோப்பு ஆகியவற்றை அமைச்சருக்குப் பரிசளித்தார். அவற்றைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர், “இந்தப் பை முதல், இதிலுள்ள ஒவ்வொரு பொருளும் உங்கள் கைவண்ணத்தால் உயிர் பெற்றவை. இவற்றைப் பரிசாகப் பெறுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி” எனக் கூறினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/tha4-2025-11-26-21-51-50.jpg)
அடுத்து பேசிய அமைச்சர், “நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கும் வரவேண்டும். தற்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் தங்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தொழில்நுட்பம் மகளிர் கைவசப்படவேண்டும். நமக்கான வேலை முன்னேற்றம், நமக்கான தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது ஆரம்பகாலப் பயிற்சி. அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும். இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் மகளிர் பொருளாதாரத்தில் உயரமுடியும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/tha1-2025-11-26-21-50-40.jpg)