கர்நாடகா மாநிலம், துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசித்ரா (33). இவர் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். 18 மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின் தந்தை இறந்து விட்டார். இந்த நிலையில், அவர் ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அந்த ஜோதிடர், உனது தந்தையை உனது தாயார் தான் சூனியம் வைத்துக் கொன்றுவிட்டார் என்று கூறியுள்ளார். ஜோதிடர் சொன்னதை முழுமையாக நம்பிய சுசித்ரா, தனது தாயாரின் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சுசித்ரா, தனது தாயாரின் வீட்டிற்குச் சென்றார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது தாயார் புஷ்பவதியின் முகத்தில், அவர் தலையணை வைத்து அழுத்தினார். இதில் புஷ்பவதி மூச்சுத்திணறி இறந்து போனார்.
இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாதது போல், தனது தாயார் இயற்கையான முறையில் மரணமடைந்து விட்டதாக உறவினர்களுடன் சுசித்ரா நாடகமாடினார். இதையடுத்து , இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருப்பினும், இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் பொதுமக்கள் சிலர் கருதினர். இதன் காரணமாக, இந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கியத்சந்திரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. ஆரம்பக்கட்ட விசாரணையில் சுசித்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றத்தில் சுசித்ராவின் கணவருக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/astro-2026-02-13-19-19-31.jpg)