ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 (A1) குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்தவர் ரவுடி நாகேந்திரன். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. முன்னதாக அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வந்ததும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிகோரி அவரது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாகேந்திரனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய அஸ்வத்தாமனுக்கு வரும் 13ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இறுதிச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்ட மறைந்த ரவுடி நாகேந்திரனின் உடலுக்கு முன்பாக அவருடைய இரண்டாவது மகன் திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.