சிவகாசியில் நடைபெற்ற தேமுதிக “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரதயாத்திரை பொதுக்கூட்டத்தில்,  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவும் இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரனும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்திப் பேசினர். 

Advertisment

பிரேமலதா பேசியபோது “விருதுநகர் மாவட்டம் என்றாலே அது கேப்டன் விஜயகாந்தின் கோட்டை. இங்கு திரண்டிருக்கும் கூட்டமே அதற்குச் சாட்சி. இலங்கை தமிழர்கள் அன்பாக வழங்கிய பரிசுதான் இந்த பிரச்சார ரதம்; அது  கேப்டன் மக்கள்மீது கொண்ட பாசத்தின் அடையாளம். கடந்த தேர்தலில் விஜயபிரபாகரனின் வெற்றி பறிக்கப்பட்டது; இந்த முறை மக்கள் அந்த வெற்றியை உறுதிசெய்து திருப்பித் தரப் போகிறார்கள். விருதுநகர் தொகுதியில் அவர் நிரந்தர வேட்பாளர். அவர் எங்கு போட்டியிடுகிறார் என்பதை  அனைவரின் ஆசீர்வாதத்தோடு அறிவிப்போம். 

Advertisment

பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன; தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பே முக்கியம். இனிமேல் உயிரிழப்புகள் நடக்காத சூழல் உருவாக்கப்படும். விபத்துக்கான காப்பீடு தொகை தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்யப்படும். சீனப்பட்டாசுகள் நாட்டுக்குள் வருவது தடுக்கப்படும். தேமுதிக எந்த தொகுதியில் வென்றாலும் அந்த தொகுதியை தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். கேப்டன் ஒருவர்தான்; ஆனால் அவர் லட்சக்கணக்கான கேப்டன்களை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தேமுதிக தொண்டர்களை “கேப்டன்” என்று அழைக்கும் மரபு இந்தக் கட்சிக்கே உரியது. 

கடைக்கோடி தொண்டர்கள் இருக்கும் வரை தேமுதிக-வை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டும் அரசியல் எங்களுக்குத் தேவையில்லை; அன்புக்காக,நம்பிக்கைக்காக வந்த கூட்டமிது. இனி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே. தொண்டர்கள்தான் என் உயிர். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். தொண்டர்கள் விரும்பும் அணியுடன்தான் கூட்டணி அமையும். நான் பதவி பெற வேண்டும் என்பதற்காக அல்ல; தொண்டர்கள் உயர வேண்டும் என்பதற்காக தான் என் அரசியல்.” என்றார்.  
 
விஜயபிரபாகரன்  பேசியபோது  “தேர்தலில் நான் தோற்றிருக்கலாம்; ஆனால் உங்கள் இதயங்களை நான் வென்றிருக்கிறேன். அதற்கும் மேலான வெற்றி எனக்கு தேவையில்லை. விருதுநகர் மக்கள் இன்னும் என்னைக் கைவிடவில்லை. கடந்த தேர்தலில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்; நானும் புரிந்துகொண்டேன். 2006ல் அதிக வாக்குகள் பெற்ற தேமுதிக, ஏன் பின்னர் வாக்கு குறைந்தது என்பதற்கான காரணங்களும் புரிந்துவிட்டன. இந்த அனுபவங்கள்தான் அடுத்த வெற்றிக்கான பாதையைக் காட்டுகிறது. 

Advertisment

2026 தேர்தலில் தேமுதிக சொல்லும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தமிழக அரசியலில் ஒரே பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக ஆதரிக்கும் கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்க வேண்டும்.கேப்டன் விஜயகாந்தின் வளர்ப்புதான் தேமுதிக. அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர் போல; நானும் உங்கள் வீட்டுப் பிள்ளைதான். கேட்பது என் உரிமை, 
நிறைவேற்றுவது உங்கள் அன்பு.” என்றார்.  

இலவச சேலை பரபரப்பு – மூதாட்டி மயக்கம்

பிரேமலதா மற்றும் விஜயபிரபாகரனுக்கு கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசளித்தனர். பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் பரபரப்பு ஏற்பட்டது; சிலர் மேடையிலேயே ஏறிச் சேலைகளை அள்ளிச் சென்றதால் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. சேலை வாங்க வந்த ஒரு மூதாட்டி மயங்கி விழ, தண்ணீர் தெளித்து உடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றனர். சூழ்நிலை மோசமடைந்ததால் காவல்துறை இலவச சேலை விநியோகத்தை நிறுத்தி, சேலை மூட்டைகளைப் பறிமுதல் செய்து, கூட்டத்தினரைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியது; பின்னர் வீடுகளுக்குச் சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரதயாத்திரை ஊர்வலத்தில் பேண்ட் இசை, பறை இசையுடன் தொண்டர்கள் ஆடியபோது  உற்சாகம் காட்டினர். விஜயகாந்த் வேடமணிந்து நடனமாடிய கலைஞரை உண்மையிலேயே கேப்டன் என நினைத்து சிலர் காலில் விழுந்தும், குடும்பத்துடன் செல்பி எடுத்தும் பரவசமடைந்தனர்.  சில தொண்டர்கள்  அளவுக்கு மீறிய உற்சாகத்திலும், மது போதையிலும் நடனமாடினார்கள்.