கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்-TRF தான் காரணம் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீடு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

பஹல்காம் தாக்குதலை நிகழ்த்திய 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்'-TRF அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது என்பது தேசியப் பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கோருவதற்கான அமெரிக்க அதிபரின் அழைப்பை அமல்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளார். பயங்கரவாதத்தின் மீது எந்த சகிப்புத்தன்மையும் இல்லை. லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்-TRF அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததன் மூலம் இந்தியா-அமெரிக்கா இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு வலுவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.