நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தின் அடையாளமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஜனவரி மாதம் 29ஆம் தேதி (29.01.2026) உரையாற்றினார்.
அப்போது அவர், “21ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த காலாண்டின் தொடக்கம். 2047ஆம் ஆண்டுக்கான (Viksit Bharat 2047) விடுதலைப் பாரதத்தின் இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கியமான கட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆவார். தொடர்ந்து 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டை இன்று (01.02.2026) தாக்கல் செய்ய உள்ளார். அதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவரின் உரை, மத்திய பட்ஜெட் அறிவிப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் எனப் பிப்ரவரி 13ஆம் தேதி வரை கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
Follow Us