தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் அருகே உள்ள கோணக்குளம் பகுதியில், 18 கிராமங்களுக்கு பொதுவான மாரியம்மன் கோயில் நிலம் சுமார் 4 ஏக்கரில் உள்ளது. இந்த இடத்தில் உள்ள 'கனிமவளங்களை தவெக நிர்வாகி கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோணக்குளம் பகுதியில் உள்ள இந்த கோயில் நிலம், ராட்சத கற்பாறைகள் மற்றும் கரடுமுரடான பகுதிகளைக் கொண்டது. இந்நிலத்தைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், கோணக்குளம் நீர்த்தேக்கம் ஆகியவை உள்ளன. மேலும், கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு செல்லும் மத்திய அரசின் உயர் கோபுர மின் பாதைகளும் இதன் வழியாகச் செல்கின்றன. குற்றச்சாட்டின்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் தாபா சிவா என்பவர், போலியான அனுமதி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்நிலத்தில் இரவு-பகலாக வெடிவைத்து கற்களை உடைத்து, உலிக்கற்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறார். மேலும், நுரை மண்ணையும் லோடு லோடாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/22/tvk2-2025-12-22-16-23-32.jpg)
பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் மக்கள், ஆத்திரமடைந்து கோணக்குளம் கோயில் மண்டு நிலத்தில் (கொள்ளை நடந்த இடத்தில்) ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால், அருகிலுள்ள உயர் மின் கோபுரங்கள் சரிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அப்படி நடந்தால் சுற்றியுள்ள கிராமங்கள் பெரும் அழிவுக்கு உள்ளாகும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கையில், “இந்நிலம் கனிமவளம் மிக்கது. அதிகாரிகள் ஆதரவுடன் கொள்ளை நடக்கிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபடுவோர் மீதும், துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.இச்சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் நிலங்களில் சட்டவிரோத கனிமவள அகற்றல் தமிழ்நாட்டில் தொடரும் பிரச்சனையாக உள்ள நிலையில், இது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/tvk1-2025-12-22-16-22-56.jpg)