‘மரக்கார் பிரியாணி பெயரில் கோடிகளில் மோசடி; 240 பேரை ஏமாற்றிய கங்காதரன் கைது!’ என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 8ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, தமிழக வரலாற்றில் முதன்முறையாக பொருளாதாரக் குற்றவாளியான கங்காதரன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

தமிழகத்தில் பெருகி வரும் நிதி நிறுவன மோசடிகளையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு 08.07.2025 அன்று அரசாணை வெளியிட்டது. அதில், பொருளாதாரக் குற்றவாளிகள், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள் மற்றும் திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஆகியோரை  தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம். 1982 (1982-ன் சட்டம் 14) (குண்டர் தடுப்புச் சட்டம்)-ன் கீழ் கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட "மரக்கார் பிரியாணி", "Drool door India private limited" மற்றும் "Cathel Cafe" ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி, பங்கீட்டு அடிப்படையில் (Franchise-based) பங்கீட்டு உரிமம் வழங்குவதாகவும், அதன்பேரில் மேற்படி பிரியாணி கடைகளை அந்நிறுவனமே நிர்வகித்து, வருமானத்தில் 10% மற்றும் மாதந்தோறும் ரூ.50,000 லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை பொது மக்களிடம் தெரிவித்தும்,  21 இடங்களில் மாதிரி கடைகளைத் திறந்து பொதுமக்களை நம்பவைத்து தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 239  பேரிடம் தலா ரூ 5,18,000 /- வீதம் சுமார் ரூ.12 கோடிக்கும் மேல் முதலீடாகப் பெற்றுள்ளனர்.

வசூலித்த முதலீட்டுப் பணத்தை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட மரக்கார் பிரியாணியின் நிறுவனர், தென்காசி மாவட்டம்,  சங்கரன்கோவில் அருகே உள்ள விஜயரங்கபுரத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் மகன் கங்காதரன் மற்றும் அவரது மனைவி மரியநாயகம் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு (குற்ற எண். 02/2025) வழக்குபதிவு செய்தது. விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி நாகலட்சுமி தலைமையிலான பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர், முதன்மைக் குற்றவாளி கங்காதரனை 07.07.2025 அன்று கைது செய்து, விருதுநகர். மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

Advertisment

பொருளாதாரக் குற்றப்பிரிவு, தென் மண்டல காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். என்.ஒ.சுக புத்ரா, மேற்கண்ட வழக்கின் முதன்மை குற்றவாளி கங்காதரனை குண்டர் தடுப்பு சட்டம் 14/1982-ன் கீழ் கைது செய்ய 02.08.2025 அன்று ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையினை குற்றவாளி கங்காதரனுக்கு 03.08.2025 அன்று மதுரை மத்திய சிறையில் சார்பு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குற்றப்பிரிவானது,  இந்த  வழக்கில் முக்கியப் பொருளாதாரக் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததன் மூலம், பொருளாதாரக் குற்றத்திற்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையானது, பொருளாதாரக் குற்றங்களில் மீண்டும் ஈடுபட,  குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.