கடந்த நவம்பர் 26-28 நாளிட்ட நக்கீரனில், தீயணைப்பு அலுவலகத்தில் அதிரடி, நெல்லை பரபரப்பு என்ற தலைப்பில் நெல்லையின் பாளையில் செயல்பட்டு வருகிற நான்கு மாவட்ட தீயணைப்பு நிலையங்களுக்கான மண்டல தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்தில், வசூல் வேட்டை நடக்கிறது என்கிற தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையின் ஏ.டி.எஸ்.பி. எஸ்கால் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்த தீயணைப்பு வீரரும் டிரைவருமான செந்தில்குமாரிடமிருந்து 27ஆயித்து 400 சிக்கியது பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

அதை தொடர்ந்து அந்த மண்டல அலுவலக துணை இயக்குநர் சரவணபாபு இல்லாத நிலையில் அவரது அறையின் கப்போர்டிலிருந்து 2லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தீயணைப்பு அலுவலகத்தில் இப்படி கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது ஒரு புறம் மாவட்டத்தை அதிரவைத்தாலும் மறு நாள், சோதனைக்கு முந்தைய நாளில் நடு இரவு 12.10க்கு பைக்கில் வந்த காக்கி பேண்ட் நீல நிற சட்டையணிந்த நபர் ஒருவர் கொண்டு வந்த பையிலிருந்த சில கட்டுகள் கீழே விழ, அதை எடுத்துக் கொண்டு அலுவலக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று 10 நிமிடங்களுக்குப் பின் வெளியேறிச் செல்லும் காட்சிகள் அலுவலகத்தின் எதிரேயுள்ள ஒரு வீட்டின் சி.சி.டி.வி.யில் பதிவானது வெளியேறி மேலும் திகிலைக் கிளப்பியதையும் விரிவாகவே வெளியிட்டிருந்தோம்.

Advertisment

DSC_0980

இந்த சி.சி.டி.காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு நெல்லை மாநகர போலீஸ் கமிசனர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் கொடுத்த துணை இயக்குநர் சரவணபாபு, தனது நேர்மையான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட துறை சார்ந்தவர்களே இந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தவர் விசாரணை நடத்தி நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியிருக்கிறார். மிகவும் எதிர்ப்பும் பரபரப்பும் கொண்ட இந்தப் புகாரை விசாரிக்கிற பொறுப்பை நெல்லை மாநகர துணை கமிஷனரான வினோத் சாந்தாராமிடம் கமிஷனர் ஒப்படைத்திருக்கிறார்.  அவரது தலைமையில் விசாரணையை மேற் கொண்ட பெருமாள்புரம் போலீஸ் டீம், அது தொடர்பான பழைய விஷயங்களைக் கிளறியிருக்கிறார்கள்.

துணை இயக்குநர் சரவணபாபு முன்னதாக நாகர்கோவிலில் பணியாற்றிய போது அங்குள்ள ஒரு கல்லூரி மற்றும் ஒரு பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தீயணைப்புத் தடையில்லா சான்றிதழ் போலியானது என்பதைக் கண்டுபிடித்து முறைப்படி நடவடிக்கைக்காக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த வழக்கின் விசாரணையில்  அங்குள்ள தீயணைப்பு வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அதிகாரியைப் பழிவாங்கும் நோக்கில் அந்தச் செயலில் யாரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு என்ற கோணத்திலும், தீவிர விசாரணையை மேற்கொண்டவர்கள், தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது அந்த ஏரியாவிற்கு குறிப்பாக அந்த அலுவலகத்திற்கு வந்த போன்கால்கள் அனைத்தையும் சோதனை செய்துள்ளனர்.

Advertisment

அதில் சந்தேகப்படும்படியான ஒரு நம்பரிலிருந்து தீயணைப்பு அலுவலகத்திற்கு வந்த தொடர் கால்களை நோட் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதற்குரியவர் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றுகிற ஆனந்த் என்பது தெரியவர, அவரைத் தங்களின் கஸ்டடிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரைத் தங்களது லெவலில் விசாரித்த போலீசாருக்கு, தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணத்தை வைத்துச் சென்ற சம்பவத்தின் பின்னணியில் அவரிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் அவர்களது தொடர் விசாரணையில் இதில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உறவினரும், தனியார் ஆம்புலன்சின் டிரைவருமான முத்துச்சுடலை பற்றித் தெரியவர விசாரணை போலீசார் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.

DSC_0981

நடந்தவைகளை விரிவாகத் தெரிவித்த தீயணைப்புதுறை சார்ந்தவர்களோ, பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட இந்த பணம் வைப்பு சம்பவத்தில் சி.சி.டி.வி. காட்சியின்படி வந்த நபர் பற்றியவைகளை போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லையாம். ஓருவிதமான அச்ச உணர்வு அவரிடம் காணப்படுகிறது என்கிற தகவலுமிருக்கிறது. இதன் பின்னணியில் பெரிய நெட்ஓர்க் இருக்கிறது, துறை சார்ந்த ஒரு சிலருக்கும் இதில் தொடர்பிருப்பதாக சந்தேகமிருக்கிறது, அதனால் தான் பிடிபட்டவர் தனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று பதறுகிறாராம்.

இது போன்ற ஆபத்துகளையெல்லாம். போலீஸ் அறிந்திருக்கிறது. அவர் வாய் திறந்தால் நிலவரம் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கான சூழல் நடக்குமா? இல்லை அழுத்தம் காரணமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுமா என்ற சந்தேகமும் தீயணைப்பு துறையிலிருக்கிறது. அதனால் இதை காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. அமைப்பிலானது விசாரிக்க வேண்டும். அப்போது தான் முழு பின்னணியும் தெரியவரும் என்கிற திடமான எண்ணமும் துறை வட்டாரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். தீயணைப்புதுறை துணை இயக்குநர் அலுவலகத்திற்குள் நள்ளிரவில் பணப்பையுடன் வந்து சென்றவர் அத்துறை சார்ந்த ஒருவரே என்ற சந்தேகமிருப்பதால் அந்தத்துறையைச் சார்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு சிலர் போலீசாரின் தீவிர ஷேடோவிலிருக்கிறார்களாம். அந்த மர்ம நபர் யார்?. திகில் விலகுமா?. பரபரப்பிலிருக்கிறது, தென்மாவட்ட தீயணைப்புத்துறைகள்.