பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், ''செப்டம்பர் 1 ஆம் தேதி வந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எங்களுடைய பெரும் மதிப்பிற்குரிய ஆசிரியர் மக்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய கலக்கத்தையும், வாழ்வாதாரத்திற்கான மிகப்பெரிய கேள்விக்குறியையும் எழுப்புவதாக அமைந்திருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கட்டாயம் என ஆகும் பொழுது அந்த ஆக்ட் வருவதற்கு முன்பு யாரெல்லாம் பணியில் இருந்தார்களோ இனி அவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் பணியில் தொடரலாம் என்கிற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 

அந்த தீர்ப்பு வந்ததிலிருந்து தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக ஜெர்மனி நாட்டில் இருந்த தமிழக முதல்வர் தொலைபேசியில் துறை சார்ந்த அமைச்சராக என்னிடமும், தலைமைச் செயலாளர், இது சார்ந்து இருக்கின்ற சட்ட வல்லுநர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நம் அரசாங்கம் என்ன செய்யலாம்? ரிவ்யூ பெட்டிஷன் செல்லலாமா என ஆலோசித்து வருகிறார்.

தமிழக முதல்வர் இதுகுறித்து சொல்லுகையில் இருக்கின்ற சங்கங்களை எல்லாம் அழைத்து இதுகுறித்து அவர்களுடைய கருத்துக்கள் என்ன; அவர்களுடைய மனநிலை என்ன என்பதை கேளுங்க. ஒன்றை மட்டும் சொல் இந்த அரசு இருக்கும் வரை எந்த ஒரு ஆசிரியரையும் கைவிடாமல் பாதுகாப்போம் என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதைச் சொல்லித்தான் இன்று பல்வேறு சங்கங்களை சார்ந்து இருக்கின்ற நிர்வாகிகள் எல்லாம் சந்தித்து அனைத்து ஆசிரியர்களின் பிரதிநிதிகளாக தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள்'' என்றார்.