The Supreme Court issued notice all state governments asking respond Deadline on the bill by the President
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது.
அதோடு, ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்று தந்ததற்கு, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியிருந்தார். இவருடைய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜக்தீப் தன்கரின் விமர்சனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றினார்.
இத்தகைய சூழலில் தான், தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?. இந்த தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பின் மீது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கை இன்று (22-07-25) உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் இருந்தனர். அப்போது, இந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் அமர்வுக்கு சட்டப்பிரிவுகளை விரிவாக எடுத்துரைக்க மத்திய அரசின் வழக்கறிஞர் உதவுவார் என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.