கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி வீர வசனம் பேசிய மாணவன் ஒருவர், தற்போது ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பேசிய மாணவன், ‘ஏறுனா ரயிலு... எறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு...இந்த தவம் இருக்கிற வரையில் எதுவும் செய்யமுடியாது’ என ரைமிங் வசனத்துடன் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளான். இதனை அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திண்டுக்கல் செம்பட்டி அருகே நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் அந்த மாணவன் கைதாகியுள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியார் ஏடிஎம்மில் பணம் வைப்பதற்கான ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த நாகர்ஜுன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாகர்ஜுன், ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முருகன் செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படைட்யில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், நாகர்ஜுன் தான் தனது கூட்டாளிகளுடன் அந்த பணத்தை கொள்ளையடித்ததையும், ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துவிட்டு போனதாக அவர் நாடகம் ஆடியதும் போலீஸுக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாகர்ஜுன், சுரேந்தர், முகமது, ரிதீஷ், கார்த்திகேயன், ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த தவம் எனும் ப்ரீத்திவ் என்ற 19 வயது இளைஞரும் கைதாகியுள்ளார். அந்த ப்ரீத்திவ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த போது ஆசிரியர்கள் முன்பு வீரவசனம் பேசிய மாணவர் என்று கூறப்படுகிறது. ப்ரீத்திவ் பேசும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.