மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் முக்கிய பிரச்சார நிகழ்வாக அமைந்துள்ளது.

Advertisment

இந்த நடைபயணம் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் மது அருந்துதலின் தீமைகளை எதிர்த்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சாதி-மத மோதல்களைத் தடுத்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.

Advertisment

நடைபயணம் திருச்சியிலிருந்து மதுரை வரை சுமார் 175 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. மணப்பாறை, கொடைரோடு, வாடிப்பட்டி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. வைகோவுடன் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் உடன் நடந்தனர்.

ஜனவரி 12ஆம் தேதி (நேற்று ) மதுரை ஒத்தக்கடையில் இந்த நடைபயணம் நிறைவு பெற்றது. நடைபயணம் நிறைவு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடைபயண நிறைவு விழாவில் பேசிய வைகோ 'மதவாதிகளின் கொட்டம் அடக்கப்படும் 'என ஆவேசமாக பேசினார். அவரது உரையில், ''நாங்கள் அதிகாரத்திலே பங்கு கேட்கவில்லை என்பதோடு அந்த பேச்சுக்கு இடம் வைக்கவில்லை என்னை பொருத்தமட்டில். அமைச்சர் பதவி என் வீட்டின் என் அறையின் கதவைத் தட்டிய போதும், என்னுடைய கேபினட்டில் நீ கண்டிப்பாக முக்கியமான இலாகாவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அடல் பிகாரி வாஜ்பாயும் பக்கத்திலே இருந்த அத்வானியும் வற்புறுத்திய போதிலும் 'ஐ வில் நெவர் ஜாயின் யுவர் கேபினட். ஐ வில் நெவர் பிகம் எ மினிஸ்டர்' என்று நிராகரித்தேன்'' என்றார்.

Advertisment

அதேபோல் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசுகையில், ''இவரிடம் சினிமா கவர்ச்சி இல்லை. பணபலம் இல்லை. சாதி மத பிரிவினைவாத அரசியல் இல்லை. லஞ்ச லாவண்யம் இல்லை. பொய் புரட்டு இல்லவே இல்லை. ஆனால் இவரின் குருதியில் இரண்டற கலந்துள்ள தமிழ்ப்பற்று உண்டு. தாய்த் தமிழ் மண்ணை காக்கும் போர் குணம் உண்டு. அதற்கான தியாக உணர்வு உண்டு. நேர்மை உண்டு. மனிதநேயம் உண்டு. அன்பே சிவம் என்பதை பலர் உணராமல் இருக்கிறார்கள். இதை சொன்னவர் திருமூலர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது திருக்குறள். அடிப்படை தேவைகளைப் பற்றி அரசியல்வாதிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்புங்கள். விவாதம் செய்யுங்கள். ஆனால் உங்களை திசைதிருப்பும் சாதி, மத அரசியலை நீங்கள் புறக்கணியுங்கள். மக்கள் பணி, பொது சேவை, நேர்மை இதை மையப்படுத்தி ஒரு அளவுகோலாக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யுங்கள். சாதி, மத எல்லைகளை கடந்து அரசியல் எல்லைகளைக் கடந்து, கட்சி எல்லைகளைக் கடந்து, நல்லவர்களை மக்கள் சேவகர்களை மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் தேர்ந்தெடுங்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள்'' என்றார்.