ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே அனுமன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது மனைவி தனபாக்கியம் (55). வேமாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவியாக பதவி வகித்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செந்தில் ராஜா திருமணமாகி ஈரோடு சடையம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மகன் சந்தோஷ் ராஜா (40) எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சந்தோஷ்ராஜா தாய் - தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் ராஜா மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனபாக்கியத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது தந்தையும் கண்டித்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சந்தோஷ் ராஜா மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தாய் தான பாக்கியத்துடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது தாய் மகனை கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் ராஜா தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனபாக்கத்தின் தலை, முகத்தில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தனபாக்கியம் சரிந்து கீழே விழுந்தார்.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடி வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அலறினார். இதை அடுத்து வீட்டிலிருந்து சந்தோஷ் ராஜா வேகமாக வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.
இது குறித்து 108 மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து தனபாக்கியத்தை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி கதறி அழுதார்.பின்னர் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனபாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷ் ராஜாவை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை அவரது மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us