நெல்லையில் மருத்துவமனை வாசலில் வைத்து தந்தை கண்முன்னேயே மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் உடல் தனியார் மருத்துவமனைக்கு கவின் என்ற இளைஞர் தன்னுடைய தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கவினை தந்தையின் கண்முன்னே வெட்டி படுகொலை செய்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞர் கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதிகள் நிறைந்த அந்த பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மருத்துவமனையின் வாயிலில் உள்ள சிசிடிவி கேமராகாட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கவின் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட நபர் காவல் துறையைச் சேர்ந்தவர் என்பது, அவருடைய மனைவியும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் இதுதொடர்பான உறுதியான தகவல்களை காவல்துறை வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணையானது நடைபெற்ற வருகிறது.