The second state conference of the Thaweka concludes Photograph: (tvk)
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியது. அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றினர்.
இறுதியாக கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், ''ஒரு முறை சிங்கம் கர்ஜித்தது என்றால் அந்த சத்தம் சுமார் எட்டு கிலோமீட்டருக்கு எல்லா திசைகளும் அதிரும். அப்படிப்பட்ட அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். வேடிக்கை பார்ப்பதற்கு வெளியேவராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் மிருகங்களை தான் வேட்டையாடும். பெரும்பாலும் தன்னைவிட பெரிய சைஸ் உள்ள மிருகங்களை தான் வேட்டையாடும். தாக்கும், ஜெயிக்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/21/a4951-2025-08-21-18-14-27.jpg)
எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாத கெட்டுப் போனதை தொட்டுப் பார்க்காது. அப்படிப்பட்ட இந்த சிங்கம் அவ்வளவு ஈசியாக எதையும் தொடாது. தொட்டா விடாது. காட்டினுடைய நான்குபுறமும் தன்னுடைய பவுண்டரியை வைக்கும். சிங்கம் அப்படித்தான் காட்டையே தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியா இருக்கவும் தெரியும். அப்படியே தனியா வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் சும்மா கெத்தா தனிய வந்து அத்தனை பேருக்கும் தண்ணி காட்டும். எப்போதும் எதிலும் தன்னுடைய தனித்தன்மையை இழக்கவே இழக்காது. சிங்கம் என்றுமே சிங்கம்' என பேசிய விஜய், தொடர்ச்சியாக திமுக மற்றும் பாஜக, அதிமுக கட்சிகளை விமர்சித்து பேசினார்.
மாநாடு முடிவு பெற்ற நிலையில் மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நொறுங்கி கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தொண்டர்கள் மாநாட்டு திடலில் இருந்து வெளியேறி வருகின்றனர். மாநாடு முடிந்து தொண்டர்கள் வந்த வாகனங்கள் வெளியேறுவதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.