சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''முதலமைச்சரின் டுவீட்டை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்றத்தாழ்வுகளை பாகுபாடுகளை ஏற்படுத்தும் காவி கொள்கை என்று சொல்லி இருக்கிறார். 'அன்பே சிவம்' என்று தான் காவி கொள்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவரும் சமம் என்பதுதான் காவி கொள்கை. குசேலனும் கிருஷ்ணனும் ஒன்றாக தான் பழகி இருக்கிறார்கள். ஆக நாம் பின்பற்றக்கூடிய இந்து மத கொள்கைகள் என்னைக்குமே ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வந்ததே கிடையாது. ஆனால் இவர்கள்தான் கட்சியில் உள்ள தொண்டர்கள் எல்லாம் வேறு; நம் குடும்பத்தினர் வேறு என நினைக்கிறார்கள். துணை முதலமைச்சர் பதவிக்குகூட தொண்டர்கள் யாரும் வர முடியாது தன்னுடைய மகன்தான் வரவேண்டும் என ஒரு பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோவில்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னதை தவறாக முன்னிறுத்துகிறார்கள். நிதி மேலாண்மையை அவர் சொன்னார். இன்னும் சொல்லப் போனால் பாஜகவின் கொள்கையே கோவில்களிலிருந்து அரசாங்கம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான்.  மற்ற துறைகளின் கஜானாவில் செலவுக்காக பணம் இருக்கும் பொழுது அறநிலையத்துறையில் இருந்து மட்டும் பணத்தை எடுத்து காலி செய்து கொண்டிருக்கிறீர்கள். நிதி மேலாண்மை தவறாக இருக்கிறது என்பதை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார். பாரதியார் பாடல்களை கொண்டாடியவர்கள் பாரதியாரை கொண்டாடியது கிடையாது. நிச்சயமாக கல்விக்கூடங்கள் கட்டுவதை யாருமே எதிர்ப்பதில்லை பாஜக உட்பட.

ஆனால் நீங்கள் எந்த நிதி மேலாண்மையை மேற்கொள்கிறீர்கள். வக்ஃபு போர்டில் பணத்தை எடுக்கிறீர்களா? கிறிஸ்டின் போர்டில் இருந்து பணத்தை எடுக்கிறீர்களா? ஆனால் இந்து மக்களின் காணிக்கைகளை மட்டும் ஏன் பயன்படுத்துகிறீர்கள். கல்விக்காக பயன்படுத்த வேண்டாம் என சொல்லவில்லை. மற்ற துறையில் நிதி இருக்கும் போது  நீங்கள் ஏன் இதை மட்டுமே காலி செய்கிறீர்கள் என்பதைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். உடனே ஏதோ கல்விக்கூடமே வேண்டாம் என சொன்னது போல் பேசக்கூடாது. நீங்கள் டாஸ்மாக்கில் இருந்து எவ்வளவு பணத்தை எடுத்து செலவு செய்கிறீர்கள். டாஸ்மாக்கின் வருமானம் என்ன? டாஸ்மாக்கே வேண்டாம் என சொல்லிக் கொண்டிருந்தீர்கள், அதை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று டாஸ்மாக்கை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கோவிலை கொண்டாடுபவர்களை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்'' என்றார்.