தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பத்திரமாக இருக்க எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வறட்டு பள்ளத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. ஈரோட்டில் மேலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றிமலை பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக வனப்பகுதிக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஓடையை கடக்க பயன்படுத்தி வந்த தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வந்த பள்ளி வேன் ஒன்று ஓடையை கடக்க முடியாமல் மீண்டும் மாணவர்களை வீட்டிற்கே சென்று விட்டது. ஓடையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.