தமிழ்நாடு முழுவதும் பழங்குடியின மக்கள் (நரிக்குறவர்) தங்களுக்கு ஆதார் இல்லாததால் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்று இல்லாமல் தவிக்கின்றனர். அதனால் பழங்குடியின குழந்தைகளின் படிப்பை கவனத்தில் கெகாண்டு பிறப்புச் சான்று வழங்க சிறப்பு முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Advertisment

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கூத்தாடிவயல் பகுதியில் பழங்குடியின மக்கள் (நரிகுறவ இன மக்கள்) 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் பலரது குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் இருந்து வந்த நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களுடன் பேருந்து நிலையங்களில் யாசகம் பெற அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் தான், அரசு சார்பில் பழங்குடியின மக்களுக்கான பிறப்பு பதிவு சிறப்பு முகாம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிறப்புச் சான்றுக்கு விண்ணப்பிக்க பழங்குடியின மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அதில் 28 பேர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச்சான்று வேண்டி கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் கொடுத்தனர்.

Advertisment

முகாமில், மனுவை பெறுவதற்கு முன்பு கோட்டாட்சியர் அபிநயா பேசும் பொழுது, “உங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டும் என்றால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவீர்களா? எனக்கு உறுதி கொடுத்தால் தான் சான்றிதழ் தருகிறேன். யாரும் கடைத்தெருக்களில் தங்களுடைய குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும்”என்று கூறியவுடன் மகிழ்ச்சியுடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற உறுதிமொழியை கொடுத்தனர்.

விழா முடிந்தவுடன் அங்கு வந்த ஒரு பழங்குடியின பெண் கோட்டாட்சியரிடம், ‘தன் மகன்களை நன்றாக படிக்க வைத்துள்ளேன். மகளை +2 படிக்க  வைத்திருக்கிறேன். அவர்களுக்கு வேலை வேண்டும்’ என்று கேட்டார். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்த அந்தப் பெண்ணுக்கு கை கொடுத்து பாராட்டியவர் வேலைவாய்ப்பிற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் ஒரு மகள் உள்ளார் மகளை படிக்க வைக்கவில்லை என்று கூறியதற்கு, ‘ஏன் பெண் குழந்தையை படிக்க வைக்கவில்லை. என்னை என் அப்பா அம்மா படிக்கவில்லை என்றால் நான் இன்று ஒரு கோட்டாட்சியராக எப்படி இருந்திருப்பேனா? படிப்புதான் எல்லாருக்கும் முக்கியம் குழந்தைகளைப் படிக்க வையுங்கள்’ என்று அறிவுரை கூறினார்.

Advertisment

இதே போல, முகாமில் கலந்து கொண்ட வட்டாட்சியர் ஜபருல்லா, ‘உங்கள் குழந்தைகளை பேருந்து நிலையங்களுக்கு அழைத்து வந்து கண்டவர்களிடமும் அய்யா, அம்மா என்று கையேந்த வைத்திருக்கிறீர்கள். அது அவமானம் இல்லையா? நமக்கு சுயமரியாதை வேண்டும். படிச்சால் தான் அது கிடைக்கும். அரசாங்கம் நோட்டுப் புத்தகம், பை, சீருடை, சோறு எல்லாம் கொடுக்கும் போது ஏன் குழந்தைகளின் படிப்பை கெடுத்து வாழ்க்கையை சீரழிக்கனும். இப்ப பிறப்பு சான்று வாங்கிட்டு போய் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க படிச்சு முடிச்சதும் இதே போலை விழா நடத்தி வேலைக்கு அனுப்புவோம்’ என்றார்.