தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குப் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு என பல்வேறு மருத்துவத்துறைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மருத்துவமனை வளாகத்தில் நேற்று (24.11.2025) திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அச்சமயத்தில் நோயாளிகளுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டதால் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சார வயர் (Electric wire) தீப்பற்றியதால் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .
அதே சமயம் திட்டமிட்டபடி சிகிச்சை பணிகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், நோயாளிகளுக்கு உரியச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே டார்ச் லைட் மூலமாகச் சிகிச்சைகளுக்கான பணிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம், நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us