திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர்களை சந்தித்தது குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Advertisment

திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொழில் துறையினருக்காகவும், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுத் தொழில்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும்,  இன்று (15.12.2025) காலை 11:30 மணியளவில், மாண்புமிகு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷியை நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். 

Advertisment

அப்போது, திருச்சியில் இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards - BIS) அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கைக் கடிதம் வழங்கியதுடன், அதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்து உரையாடினேன்.
இதற்கு முன்பாக, கடந்த 11.12.2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ய நேரத்தில் கலந்துகொண்டு, இதே கோரிக்கையை முன்வைத்து உரையாற்றியதையும் அமைச்சருக்கு நினைவூட்டினேன்.

2026 ஜனவரி முதல் அனைத்துப் உற்பத்தி பொருட்களுக்கும் BIS தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட உள்ள நிலையில், இது அனைத்துத் தொழில்களுக்கும், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இன்றியமையாததாக மாறப்போகிறது.தற்போது திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், சான்று பெற சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அதிக நேர விரயம், கூடுதல் செலவு, பயணச் சிரமம் போன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன.

Advertisment

திருச்சி தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது; மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலிருந்து ஐந்து மணி நேரத்துக்குள் அடையக்கூடிய வகையில் சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
எனவே, திருச்சியில் BIS அலுவலகம் அமைக்கப்பட்டால், திருச்சி மட்டுமின்றி மத்திய மற்றும் தென் தமிழ்நாடு முழுவதும், மொத்த தமிழ்நாட்டுத் தொழில்துறையும் பெரிதும் பயனடையும், ஏற்றுமதி உயரும், நுகர்வோர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். ஒட்டுமொத்த தொழில்வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

இந்த அலுவலகம் அமைவது திருச்சியின் தொழில்வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் மிக முக்கியமான படியாக அமையும் என்பதை எடுத்துரைத்தேன்.தாங்கள், இதற்குரிய முக்கியத்துவம் கருதி விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அமைச்சரிடம் தெரிவித்தேன். 

அப்போதே, BIS பொது இயக்குனரிடம் தொடர்பு கொண்டு எனது கோரிக்கை குறித்து தகவல் கொடுத்ததோடு, BIS அலுவலகம் திருச்சியில் அமைக்க கோரும் எனது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.  அது, நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. 

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர்களையும் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வழங்கினேன். அதனை பெற்றுக்கொண்டதுடன், இந்த கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி அவரே, அமைச்சர் திரு. பிரலாத் ஜோஷி அவர்களை தொலைபேசியில் அழைத்து, எனது பெயரையும் எனது கோரிக்கையையும் கூறி அதை நிறைவேற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். மனதிற்கு நிறைவாக இருந்தது. நன்றி தெரிவித்துக்கொண்டு புறப்பட்டு, BIS பொது இயக்குனர் அலுவலகம் சென்று, அவரையும் சந்தித்து இக்கோரிக்கையை கொடுத்துவிட்டு, இரண்டு அமைச்சர்களையும் இந்த கோரிக்கைக்காக சந்தித்த விவரங்களை தெரிவித்துக்கொண்டேன். அவரும் எனது கோரிக்கையை பரிசீலித்து ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.