தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நேற்று (16.10.2025) இரவு முதல் சென்னையில் தொடர்ந்து முழுவதும் மழை பெய்து தொடர்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (17.10.2025) காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று காலை 7 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.