பா.ம.க. கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸுக்குத் தனியாக நாற்காலி ஒன்று ஒதுக்கப்பட்டது. இருப்பினும் ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அந்த நாற்காலி காலியாவே இருந்தது. இதையடுத்து இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், 'பாமக தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில் நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டிற்கு தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.
அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் நடவடிக்கைகள் பாமகவின் அரசியல் சூழலையே பாழாக்கும் வகையில் இருக்கிறது. அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது. அன்புமணிக்கு எதிரான தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்' என விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமல்லாது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உளவுத்துறை என மொத்தம் மூன்று இடங்களில் ராமதாஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.