கடலூர் அருகே செம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை நேற்று (08/07/2025) காலை கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு ரயில்வே கேட்டை கடக்கும் போது எதிர்பாராத விதமாக விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் மோதி வேன் நொறுங்கி வேனில் பயணம் செய்த சாருமதி, நிமலேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் நிமிலேஷ் கால் துண்டான நிலையில் ரயில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் செழியன், விஸ்வேஸ் மாணவர்களையும் வேன் ஓட்டுநர் சங்கரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் விபத்து நடந்த பகுதியில் காப்பற்ற வந்த செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் வேன் மோதி சேதமடைந்த மின்கம்பி பட்டு தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற செழியன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/09/a4330-2025-07-09-08-17-16.jpg)
'ரயில்வே கேட் மூடாததால் பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடக்கும் போது விபத்து ஏற்பட்டது. இதற்கு முழு காரணம் ரயில்வே கேட் கீப்பர் தான்' என உத்தர பிரதேசத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை அப்பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக தாக்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர்.கேட் கீப்பர் செய்த தவறால் பெரும் விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தவுடன் அவரை ரயில்வே நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை இருப்புபாதை காவல் துறையினர் கைது செய்து சிதம்பரம் இருப்பு பாதை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/09/a4345-2025-07-09-08-19-35.jpg)
இவரிடம் திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அன்பழகன், அதேபோல் மண்டல காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேட் கீப்பர் மீது தவறு அதிகம் உள்ளதால் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஆஜர் செய்து சிறைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து செம்மங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் பாலாஜி என்ற இளைஞர் கூறுகையில், 'கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பலமுறை கேட் போடாமல் இந்த பகுதியில் உள்ள கடைகளில் நின்று பேசிக் கொண்டிருப்பார். அப்போது ரன் துரு ரயில் வண்டிகள் சென்று விடும். கேட் கீப்பர் அறையில் போன் அடித்துக் கொண்டு இருக்கும். அதைப் பார்த்து அந்த வழியாக செல்பவர்கள் கூறுவார்கள். அதையும் அவர் இந்தியில் பேசி அலட்சியப்படுத்துவார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/09/a4346-2025-07-09-08-22-13.jpg)
இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பள்ளி வேன் ரயில்வே கேட் அருகே வரும்போது கேட் திறந்து உள்ள நிலையில் ரயில் சென்றுள்ளது. அப்போது பள்ளி வேன் ஓட்டுநர் பங்கஜ் சர்மாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஹிந்தியில் பதில் கூறியுள்ளார். அதை புரியாத வேன் ஓட்டுநர் தமிழில் அவரை திட்டி விட்டு சென்று விட்டார்.
இதுபோன்ற பலமுறை அவர் நடந்துகொண்டுள்ளார். அருகே உள்ள ரயில் நிலையத்தில் உள்ள நிலைய அலுவலர்கள் அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர் மீது எந்த புகார் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். பலமுறை அதேபோல் தப்பித்த இவர் தற்போது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பங்கஜ் சர்மா பலமுறை நோவா என்ற போதை புகையிலை சிறிய அளவில் சுண்ணாம்புடன் சேர்த்து அதை கையால் நுணுக்கி வாயில் வைத்துக் கொள்வார். அப்போது 3 அல்லது 4 மணி நேரம் இவர் மிதமான போதையில் இருப்பது போல் இருப்பார்'' என்று கூறினார்.
அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த கலையரசி என்ற பெண்மணி கூறுகையில், ''ஒரே சத்தம் கேட்டு தான் நாங்கள் ஓடி வந்தோம். அப்போது மக்கள் எல்லாம் சேர்ந்து அடிபட்ட குழந்தைகளை தூக்கி வரும் போது எங்க நெஞ்சியே பதறிவிட்டது. என்ன செய்வது தெரியாமல் அனைவரும் அழுது புலம்பினோம். ஒரு ஆம்புலன்ஸில் மகள் இறந்த பிணத்துடன் குத்துயிரும் குலை உயிருமாக செல்லும் மகனுடன் ஒரு தாய் சென்றதைப் பார்க்கும்போது எங்களுக்கே அந்த நிலைமை ஏற்பட்டது போல் கதறி அழுதோம். கேட் கீப்பர் ரயில் வரும்போது அவர் கேட் போடாததால் தான் ரயில்வே கேட்டை வேன் தாண்டி சென்றுள்ளது. இவர் பல முறை கேட்டை மூடாமல் உள்ள போது ரயில் சென்றதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இவரின் தவறால் 3 உயிர்கள் பறிபோயுள்ளது'' என்றார்.
20 ஆண்டுகள் ரயில்வே கேட் கீப்பரராக பணியாற்றிய ஒருவரிடம் விபத்து குறித்து கேட்டோம். அவர் ரயில்வே கேட் 3 வகையாக உள்ளது அதில் 1 -ஆளில்லா ரயில்வே கேட், 2 -ஆள் உள்ள நான் இன்டர் லாக்கிங் கேட், 3- இன்டர் லாக்கிங் கேட் என மூன்று வகையாக உள்ளது. இதில் இன்டர் லாக்கிங் கேட்டை ஒருமுறை மூடிவிட்டால் மறுமுறை ரயில் நிலைய அலுவலர் அனுமதி இல்லாமல் திறக்க முடியாது.
அதேபோல் ஆள் இல்லாத ரயில்வே கேட் என்பது ட்ரெயின் வருவதை பார்த்து கடந்து செல்ல வேண்டும். ஆனால் ஆள் உள்ள நான் இன்டர் லாக்கிங் கேட் என்பது ரயில் வரும்போது நிலைய அலுவலர் ஒரு எண்ணை கேட் கீப்பருக்கு வழங்குவார். அதனை அவர் ரிஜிஸ்டரில் பதிவு செய்து கொண்டு அவரும் கேட் போடுவதற்கு உறுதி செய்த ஒரு எண்ணை நிலைய அலுவலருக்கு வழங்குவார். அதனையும் அவர் ரிஜிஸ்டரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ரூட் கிளியராக உள்ளது என ரயில் நிலைய அலுவலர் ரயில் எந்த தடையும் இல்லாமல் வருவதற்கு கிரீன் சிக்னலை போட்டு விடுவார்.
இதற்கிடையில் கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்தாலும் மூடினாலும் ரயில் நிலைய அலுவலருக்கும் ரயில் ஓட்டுனருக்கும் தெரியாது. எனவே இதில் ரயில் நிலைய அலுவலர் கொடுத்த எண்ணை பதிவு செய்துவிட்டு கேட் போடாமல் இருந்தது தெரிய வருகிறது. எனவே இது குறித்து விசாரணையில் தெளிவாக தெரியவரும் என்றார்.
கேட்பர் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் விசாரணை மேற்கொண்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இவருக்கு ஒரு வாரத்தில் 3 நாள் இரவு பணி 3 நாள் பகல், ஒரு நாள் வார விடுமுறை என பணியாற்றி வருகிறார். இவர் திங்கள்கிழமை இரவு பணி 3-வது நாள் இரவு பணியாகும். இவர் காலையில் ரயில் நிலைய அதிகாரியை கேட் போட வேண்டும் என கொடுத்த நம்பரை ரிஜிஸ்டரில் எழுதியுள்ளார். அதேபோல் இவரும் ஒரு நம்பரை கொடுத்துவிட்டு கேட் போட்டு விட்டேன் அவரிடம் கூறியுள்ளார். இந்த இரு எண்களும் ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரயில் நிலைய அதிகாரி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். கிரீன் சிக்னலை பார்த்து ரயில் ஓட்டுநர் ரூட் கிளியர் ஆக உள்ளது என ரயிலை இயக்கியுள்ளார். ஆனால் இவர் கேட் போட்டதாக நம்பர் கொடுத்துவிட்டு கேட் போடாமல் தூங்கி விட்டார். அந்த நேரத்தில் பள்ளி வேன் வந்துள்ளது. அதே நேரத்தில் ரயிலும் வந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கேட் கீப்பர் சத்தம் கேட்டு தான் வெளியே வந்து பார்த்துள்ளார். இதனை சமாளிக்க அவர் முரண்பட்ட கருத்துக்களை கூறியுள்ளார். அதையும் நம்பி ரயில்வே நேரம் அறிக்கை வெளியிட்டு விட்டது. எனவே இதற்கு ரயில்வே கேட் கீப்பர் தான் முழு தவறு என தெரிய வருகிறது.
அதே நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இவர் பலமுறை இதேபோன்று செய்வார் என்றும், இந்த விபத்துக்கு முன் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலுக்கு இவர் கேட் போடாமல் இருந்துள்ளார் என்பதையும் கூறுகின்றனர். எனவே இவர் மீது 105, 106, 125 a, 125b bns 151 ரயில்வே ஆக்ட் என ஐந்து பிரிவுகளின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தும் இவர் அந்தப் பணியை செய்துள்ளார். ரயில்வே பொருட்களை சேதப்படுத்த காரணமாக இருந்தது, சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்'' என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/09/a4336-2025-07-09-08-22-53.jpg)
இந்த விபத்தில் செழியன், சாருமதி ஆகிய இருவரும் அக்காள் தம்பி. ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர்களும் பலியான நிலையில் அவரது உடல்களுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி தமிழக அரசு அறிவித்த தல ரூ 5 லட்சம் நிவாரண உதவியை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற இந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்த பல தாய்மார்கள் இரவு வரை சாப்பிட முடியாமல் தொலைக்காட்சி முன் அமர்ந்து கண்ணீர் கலங்கியதை பல்வேறு மாவட்டங்களில் பார்க்க முடிந்தது. இந்த துயர சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தென்னக ரயில்வே திருச்சி மண்டல பொது மேலாளர் அன்பழகன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மண்டலத்தில் உள்ள அனைத்து கேட்டுகளையும் இன்டர் லாக்கிங் கேட்டுக்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செம்மங்குப்பம் ரயில்வே கேட்டு இருக்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அரசு அனுமதி கொடுத்தால் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.