சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த வருடம் ஜூன் மாதம் 28ஆம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் இவர் மீது நகை திருடியதாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

Advertisment

இந்த விசாரணையின்போது போலீசார் அவரை கொடூரமாகத் தாக்கியதில் அடுத்த நாளான ஜூன் 29ஆம் தேதி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

Advertisment

மற்றொருபுறம் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று (04.02.2026) நடைபெற்றது. இதில், “இந்த சம்பவம் காவல் மரணம் ஆகும். நிகிதா கொடுத்த நகைத் திருட்டு புகார் முற்றிலும் பொய்” என சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

madurai-high-court-our

அதில், “ஒன்றுமே இல்லாத ஒரு வழக்கில் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். பொய் புகார் கொடுத்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற போலீசாருக்கு படம் புகட்டியே ஆக வேண்டும். காவல்துறையின் செயலை பார்த்தால் மனசு பதறுகிறது. யாராக இருந்தாலும் இந்த வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும்” என நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார். அதோடு நிகிதா கொடுத்த பொய் புகார் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ கொடுத்த  உத்திரவாதத்தை அடுத்து இந்த வழக்கு பிப்.17 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அஜித்தின் தாய் அளித்த பேட்டியில், “ஒன்றுமே அறியாத ஒரு அப்பாவியை (அஜித்குமார்) இவ்வளவு கொடூரமாக மிளகாய்ப்பொடி தெளித்தும், தண்ணீர் இல்லாமல் கொன்றுள்ளனர். இதெல்லாம் இவர்கள் சட்டத்தில் இருக்கிறதா?. தண்ணீர் எல்லாம் கொடுக்கக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறதா?. ஒரு அரக்கனைக் கொன்ற மாதிரி செய்துள்ளார்கள். அப்படி என்ன என் பையன் என்ன தீவிரவாதியா?. காவலில் வைத்து விசாரியுங்கள். எதற்கு இந்த மாதிரி கொடுமைப்படுத்துகிறீர்கள்?. மரத்தில் தொங்க விட்டனர். 

madapuram-cbi-ajith

இனிமே யார் முகத்தில் முழிக்கக் கூடாது என்று அவன் உயிரை விட்டுப் போயிருப்பான் அவனுக்கு அவ்வளவு கொடூரம் செய்துள்ளீர்கள். மனுஷனுக்கு இரக்கக் குணத்தை ஆறறிவு உள்ளவனுக்குத் தான் கொடுத்துள்ளனர். ஆனால் 5 அறிவுக்காரனாக காவலர்கள் வேலை பார்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் வெளியே வரக்கூடாது. எனக்கு அன்னைக்கு முழு விவரம் தெரியவில்லை. என்னவென்று அதற்கு அப்புறம் தான் தெரிய வந்தது. அதற்கு அப்புறம்தான் தெரிந்தது. அதற்கான நேரமே எங்களுக்குக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக என்னவென்று விசாரிக்கக் கூட எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை. வயிற்றுக் கஞ்சி கூட வாங்கி கொடுக்காமல் அன்றைக்குப் பட்டினியாகப் போட்டுக் கொன்றீர்களே நீங்கள் எல்லாம் மனுச பிறவிகளா?” எனத் தெரிவித்தார்.