கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 3ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று (15-12-25) நடந்த விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, சிக்கந்தர் தர்கா தரப்பு மேலும் சில தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கூறி மாவட்ட ஆட்சியர், கோயில் செயலர், தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று (16-12-25) விசாரணைக்கு வந்தது. அப்போது வக்ஃபு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முபீன் வாதங்களை முன்வைத்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், மலையின் பின்பக்க பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கிறது. பக்தர்களும் இஸ்லாமியர்களும் மலைக்கு செல்ல குதிரை சுணை அருகே இருவேறு பாதைகள் பிரிந்து செல்லும் அமைப்பு உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே தர்கா இருந்து வருகிறது. அதன் அருகே தொழுகை நடைபெற்று வருவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது ஒருபோதும் தொடர்ச்சியான பழக்க வழக்கமாக இருந்ததில்லை. 

ஏற்கெனவே தீபமேற்றுதல் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவுகள் இருக்கும் நிலையில் அதே வழக்கில் புதிய உத்தரவாக தனி நீதிபதி தீபமேற்ற உத்தரவிட்டிருப்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. நெல்லித்தோப்பு அதனை சார்ந்த பாதைகள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் என முன்பிருந்த உத்தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்கிய அம்சங்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று வாதிட்டார். இதனிடையே, மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள், தர்காவை கடந்து செல்ல வேண்டுமா அல்லது வேறு பாதை உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு வக்ஃபு வாரியம் தரப்பில், “தர்காவை ஒட்டி குதிரை சுணை பாதை உள்ளது. அதை தாண்டியே தூண் அமைந்துள்ளது. தர்காவிற்கு தனியாக படிக்கட்டு பாதை உள்ளது. தர்கா அமைந்துள்ள குதிரை சுணை ஒட்டி தான் அந்த தீபத்தூண் எனப்படும் அந்த தூண் இருக்கிறது. மனுதாரர் தொடர்ந்த வழக்கினால் அந்த தூண் யாருக்கு சொந்தமானது, அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்ற உரிமை விவகாரம் தற்போது உருவாகியுள்ளது. இத்தகைய பிரச்சனைகள் முழுமையாக உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும். 1920ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவுக்கு அளித்து உறுதி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.