புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எல்லைக் காவல் தெய்வமாக பெரிய குளத்தில் எழுந்தருளியுள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரு வாரங்கள் முன்பு கோயில் முளைப்பாரிக்கு விதை கொடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோவில் முளைப்பாரிக்கு விதை தூவிய பிறகு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள், உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்தனர்.
வளர்ந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கைகளுடன் கடந்த வாரம் புதன்கிழமை கிராம மக்கள் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடலில் ஊர்வலமாக பிடாரியம்மன் கோவிலை சுற்றி வந்து பெரிய குளத்தில் விட்டனர். மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/06/a4787-2025-08-06-22-57-14.jpg)
இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இரவு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் பாளை குடங்கள் தூக்கி அம்மனை வழிபட்டுச் சென்றனர். பிடாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்புத் திருவிழா புதன்கிழமை மாலை நடந்தது. அதாவது, கிராமத்தினர் தங்கள் வீடுகள் மற்றும் குலதெய்வ கோயில்களில் வைத்து குடங்களில் நெல் நிரப்பி இளம் தென்னம் பாளைகளை விரித்து வைத்து மலர்கள் மற்றும் காகிதப் பூக்களால் அலங்காரம் செய்து பெண்கள் கும்மி அடித்தனர். மாலை தாரை, தப்பட்டை முழங்க, வானவேடிக்கைகளுடன் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கும்மியாட்டத்துடன் மதுக் குடங்களை ஊர்வலமாக தூக்கி வந்து ஓரிடத்தில் நிற்க அங்கு வரும் பூசாரி மதுக்குடங்களுடன் நிற்கும் பெண்களை அழைத்துச் சென்று மண்ணடித் திடலைச் சுற்றி பெரிய குளத்திற்குள் வீற்றிருக்கும் பிடாரியம்மன் கோயிலைச் சுற்றி வந்து தென்னம்பாளையை வைத்து அம்மனை வழிப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கொத்தமங்கலம் மட்டுமின்றி சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.