திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேற்று அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து என்பவர் திடீரென உயிரிழந்தது அவருடைய உறவினர்களுக்கும் ஊர் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுத்தை நகத்தை வைத்திருப்பதாக கேரள வனத்துறையினர் சின்னாறு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு நேற்று இரவு கொண்டு வந்தனர். கழிவறைக்குச் சென்ற மாரிமுத்து கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டு கொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி 'அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய எண்ணத்தில் இல்லை; வனத்துறையினர் துன்புறுத்தியதால் அவர் தூக்கிட்டுருக்கலாம்; அல்லது அடித்துத் துன்புறுத்தி கொன்றிருக்கலாம்' என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் மாரிமுத்துவின் உடலானது உடற்கூறாய்வுக்காக திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்று (01/08/2025) காலை உடற்கூறாய்வு நடைபெற்றது. மாரிமுத்துவின் மனைவி மற்றும் உறவினர்கள் உடன் இருந்தபோது மாரிமுத்துவின் தலை மற்றும் நெற்றிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் உடற்கூறாய்வு நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணியாற்றி வந்த ஊழியர் அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் திருப்பூரில் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/01/a4630-2025-08-01-18-29-36.jpg)