திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள தமிழக - கேரளா எல்லைப் பகுதியான சின்னார் பகுதியில் கேரளா மாநில வனத்துறையினர் நேற்று (30.07.2025) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்குருமலை செட்டில்மென்ட் என்ற பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சிறுத்தை பல்லை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறி கேரள வனத்துறையினர் அவரை பிடித்துள்ளனர். இதனையடுத்து தமிழக வனத்துறையினரிடம் அவரை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை மேற்கொள்வதற்காக உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு மாரிமுத்து நேற்று அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள ஓய்வறையில் உள்ள கழிவறையை மாரிமுத்து பயன்படுத்துவதற்காக இன்று (31.07.2025) காலை அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் எதிர்பாராத விதமாக உள்பக்கமாக தாழிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சம்பவ இடத்தில் கோட்டாட்சியர், உடுமலை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலைப்பேட்டையில் சிறுத்தை பல்லை விற்க முயன்றதாக வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/31/udumail-forest-2025-07-31-11-41-45.jpg)